பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வேலின் பெருமை

தன் செயலால் பிறருக்குத் துன்பத்தை விளைவித்து அதைக் கண்டு இன்புறுகிறவன் அசுரன். இன்றைக்கும் தம் காரியங்களால் பிறருக்குத் ஊறு விளைவித்து உவகை கொள்கிறவர்கள் பல பேர் இருக்கிறார்கள்; அவர்கள் எல்லோரும் அசுர சாதியைச் சேர்ந்தவர்களே.

சங்க நூலாகிய கலித்தொகையில் ஒரு பாட்டு வருகிறது. பாலை நிலம்; அந்த நிலத்தில் தண்ணிர் இராது. மரங்கள் கருகிப் போய் இருக்கும். மான் தண்ணீர் என்று கானல் நீரைத் தேடி ஓடி அலையும். தப்பித் தவறி அங்கே யாராவது போய்விட்டால் அவர்கள் அங்குள்ள விலங்குகளுக்கு இரையாகிவிடுவார்கள். ஆறலை கள்வர் அவர்களை அடித்துப் பறிப்பார்கள். வழிப்போக்கர்களிடம் இருக்கும் அவல், அரிசி, கோதுமை, பொருள் முதலியவற்றை அவர்கள் பறித்துக் கொண்டு போவார்கள். அங்கே பயிர் பச்சை இல்லை. உழைத்துச் சாப்பிட வசதி கிடையாது. தொழில் செய்து பிழைக்கலாம் என்று வேறு பிரதேசங்களுக்குப் போகும் முயற்சியும் அவர்களிடம் இல்லை. ஆகையால் அந்தப் பக்கம் போகிறவர்களை அடித்து நொறுக்கி வழி மறித்துத் திருடிச் சாப்பிடுவதே அவர்கள் வழக்கம்.

வழிப்பறி செய்துவிட்டுப் போனால் போகட்டும், ஆளையாவது உயிரோடு போக விடுகிறார்களா என்றால், அப்படியும் போக விட மாட்டார்கள். அவர்களுக்குக் கூத்துப் பார்ப்பதிலே மிக்க மகிழ்ச்சி அந்தப் பாலை நிலத்திலே கூத்தாட யார் வரப் போகிறார்கள்? வழிப்போக்கர்களின் கழுத்தைச் சீவியவுடனே, தலையிழந்த அவர்களது முண்டம் துள்ளும் அல்லவா? அதைக் கண்டு களிப்படைகிறார்களாம். "துள்ளுநர்க் காண்பான் தொடர்ந்துஉயிர் வவ்வலின்" என்று ஒரு புலவர் பாடுகிறார். இந்த வேடர்களை அசுரர்கள் என்றே சொல்ல வேண்டும். பிறருக்குத் துன்பத்தை விளைவித்து அதனாலே இன்பம் அடைகிறவர்கள் அல்லவா?

மூன்று கோட்டைகளுக்கும் சொந்தக்காரராகிய அசுரர்கள் என்ன செய்தார்கள்? ஆகாயத்தில் விமானம் போல மூன்று கோட்டைகளும் பறந்து வந்து மக்கள் மிகுதியாக வாழும் பகுதியில் அப்படியே இறங்கும். அவை கீழே உட்கார்ந்து கொண்டவுடன்

க.சொ.1-8

105