பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 1

அந்தப் பகுதியிலுள்ள மக்கள் அப்படியே நசுங்கிச் செத்துப் போவார்கள். இதனால் என்ன பயன் என்று கேட்கலாம். இவ்வாறு மக்களைச் சாகச் செய்து பார்ப்பதில் அவர்களுக்குக் களிப்பு. இதைக் கண்டு தேவர்களுக்கு மிக்க கலக்கம் ஏற்பட்டு விட்டது. உலகம் வாழ்ந்தால்தான் தேவர்கள் எல்லோரும் வாழ முடியும். அவர்களுடைய தொழில் மின்சாரப் பகுதியில் வேலை செய்கின்ற ஊழியர்களின் வேலையையும், வளர்ச்சித் துறையில் வேலை செய்கிறவர்களின் வேலையையும் போன்றது. உலகத்திலுள்ள மக்கள் ஒன்றும் செய்யாமல், வரி கொடுக்காமல் இருந்தால், அவர்களுக்கு உத்தியோகமும் இல்லை; சம்பளமும் இல்லை. இறைவனுடைய ஆணைப்படி இவ்வுலகத்தைப் பாலிப்பதற்காக உள்ள பலதுறை அதிகாரிகள் தேவர்கள். வருணனுக்கு ஒரு பகுதி, நீர் வளத்தைக் கவனிக்க வேண்டும். வாயுவுக்கு ஒரு பகுதி; அவன் காற்றுக்குரிய மந்திரி. அக்கினி தேவன் வெளிச்சம் போடுகிற மந்திரி. இவர்களுக்கு உலக மக்களாகிய நாம் பண்ணுகிற வேள்விகளும், துதிகளும், பூசைகளும் சம்பளமாக மாறுகின்றன. இவ்வுலகில் மனிதன் வாழாமல் இருந்து விட்டால் தேவர்களுக்குச் சாப்பாடு இல்லை; பட்டினிதான்.

ஆதலின், உலகம் இப்படி அசுரர்களால் அழிந்து ஒழிந்து போவதைக் கண்டு, தேவர்கள் அலறிக் கொண்டு போய் இறைவனிடம் முறையிட்டார்கள். இறைவன் அதைக் கேட்டான். தேவர்களும் கொஞ்சம் அகங்காரத்தோடு இருந்தார்கள். அக்கினி தன் தொழிலைத் தான் செய்யாவிட்டால் உலகத்திலுள்ளவர்கள் எப்படி வாழ முடியும் என்று தருக்குக் கொண்டிருந்தான். உடம்பில் உயிர் இருப்பது என்னால்தானே என்று வாயு தருக்குக் கொண்டிருந்தான். இப்படியே எல்லாத் தேவர்களும், தாங்கள் தொழில் புரியாவிட்டால் உலகம் நடைபெறாது என்று செருக்குற்றிருந்தார்கள். அவர்களுடைய அகங்காரத்தையும் போக்க வேண்டுமென்று இறைவன் நினைத்தான்.

நாம் ஒரு காரியத்தைச் செய்தால் அதில் உள்ள ஒரு பகுதி தான் நிறைவேறுகிறது. ஆண்டவன், ஒரு காரியத்தைச் செய்யும் போது பல காரியங்கள் நிறைவேறும்.அவன் திரிபுரத்தில் இருந்த அசுரர்களை அடக்க விரும்பினான். அதோடு தேவர்களுடைய அகங்காரத்தையும் போக்க எண்ணினான். உடனே தேரில்

106