பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/117

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 1

சிவனும் திருமாலும் மாறி மாறி வேஷம் போட்டுக் கொண்டு நடிக்கிறார்கள். அவர்கள் போட்டுக் கொள்ளுகிற வேஷம் எதுவும் உண்மை அன்று. கதைகளின் உட்கருத்தை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

திரிபுர சங்காரக் கதையில் அகங்காரம் திருமாலிடத்தில் ஏற்பட்டதாக இருக்கிறது. சிவபெருமான் போருக்கு எழுந்தவுடனே திருமால் தலை நிமிர்ந்து நின்றார். இது பரமசிவனுக்குத் தெரியாதா? வில்லை வளைத்து, நாண் பூட்டி, அம்பை விடப் போனவன், திருமாலுக்கு உண்டான அகங்காரத்தை எண்ணி வேடிக்கையாகச் சிரித்தான். அவ்வளவுதான்; அந்தச் சிரிப்பு, திருமாலிடம் தோன்றிய அகங்காரத்தை எரித்தது. அதோடு முப்புரங்களையும் சுட்டுச் சாம்பலாக்கிவிட்டது.

திரிபுரங்களுக்கும் தலைவர்களாகிய மூன்று அசுரர்கள் வித்யுன்மாலி, தாரகாட்சன், வாணன் என்போர். சிவபிரான் தன் சிரிப்பினால் மூன்று கோட்டைகளையும் எரித்துச் சாம்பலாக்கினாலும், அந்த மூன்று அசுரர்களையும் அழிக்கவில்லை.

இறைவன் கருணை

ரு குழந்தை தன் கையிலுள்ள கோலினால் அடுத்த வீட்டுக் குழந்தையை அடிக்கிறது. அன்புள்ள தாய் என்ன செய்கிறாள்? குழந்தையை அடிக்க மாட்டாள். அதன் கைக்கோலைப் பிடுங்கி அடுப்பிலே போட்டு விடுவாள். அவ்வாறே செய்தான் சிவபிரான். எல்லாரும் இறைவனுடைய குழந்தைகள் அல்லவா? அசுரர்களும் இறைவனுடைய குழந்தைகள்தாமே? அந்த மூன்று அசுரர்களும் பொல்லாத பிள்ளைகளாக இருந்தார்கள். அவர் களுக்கு அதுகூலமாக மூன்று கோட்டைகள் கிடைத்தன. அவர்கள் அந்தக் கோட்டையின் உதவியால் துன்பத்தை விளைவித்தார்கள். தன் குழந்தையின் கையிலுள்ள கோலைப் பிடுங்கி எரித்துவிடும் தாயைப் போல, தன் குழந்தைகளாகிய அசுரர்களுடைய மூன்று கோட்டைகளையும் எரித்தான் சிவபிரான். ஆனால் அந்த மூன்று பேரையும் எரிக்கவில்லை. புரங்கள் எரிந்தவுடன் அந்த மூன்று அசுரர்களும் இறைவன் காலில் வந்து விழுந்தார்கள். அவனுடைய சந்நிதியில் அவர்கள் நல்லவர்கள் ஆகிவிட்டார்கள். இறைவன் தன் திருவிடியில் வந்து வீழ்ந்த வாணனை மிருதங்க வித்து

108