பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 1

அமைத்த பெயர் அது என்றே தோன்றுகிறது. இவற்றையன்றிச் சொக்கர் அலங்காரம் என்ற பெயரோடு ரெயில் உண்டான புதிதில் ரெயில் பிரயாணத்தைப் பற்றியும் மதுரைத் தலத்தைப் பற்றியும் யாரோ பாடிய இசைப்பாட்டு ஒன்று உண்டு.

கந்தருக்கு அலங்காரமாக அமைந்த நூலாதலால் இதற்கு இப்பெயர் உண்டாயிற்று. அருணகிரி நாதருடைய நூல்கள் யாவற்றுக்கும் பொதுவாக அமைந்த இயல்புகளை இதிலும் காணலாம். இந்த நூலுக்குச் சில அன்பர்கள் பொருள் எழுதி வெளியிட்டிருக்கிறார்கள்.

*

தேனாம்பேட்டை, பால சுப்பிரமணிய தேவஸ்தானத்து அறப்பாதுகாப்பாளராகிய ஸ்ரீ சந்திரசேகரன் அவர்களும் பிறரும் என்னிடம் அன்பு கூர்ந்து பல முறை தம் விருப்பம் ஒன்றைத் தெரிவித்துக் கொண்டார்கள். ஏதேனும் ஒரு நூலைப் பற்றி வாரந்தோறும் ஒரு நாள் அவ்வாலயத்தில் சொற்பொழிவாற்ற வேண்டும் என்று சொன்னார்கள். வரையறையாக இடையீடின்றிச் செய்ய வேண்டிய கடமையாதலின், நான் மெல்லப் போக்குக் கூறிக் காலம் கழித்து வந்தேன். அவர்களும் விடாப்பிடியாக என்னைத் தம் அன்பு வலைக்குள் போட்டு இறுக்கி வந்தனர். கடைசியில் ஒப்புக் கொண்டேன். முருகன் திருவருளைத் துணைக் கொண்டு ஏதோ ஒரு வகையில் வாரந்தோறும் கந்தர் அலங்கார விரிவுரை ஆற்றலாம் என்ற நம்பிக்கை எழுந்தது. திருமுருகாற்றுப் படை, கந்தர் அநுபூதி, ஞானசம்பந்தர் தேவாரம் ஆகியவற்றைத் தொடர்ந்து சொல்லியதுண்டு. அந்த வழக்கத்தால், இதையும் நிறைவேற்றலாம் என்று எண்ணினேன். நான் இந்தக் கடமையை ஏற்றுக் கொண்டதற்கு முக்கியமான காரணம் ஒன்று உண்டு. எப்படியும் வாரம் ஒரு முறையாவது முருகனைப் பற்றி ஆழ்ந்து நினைந்து விரிவாகச் பேச வேண்டிய கட்டுப்பாடாக இருப்பதால் என் மனத்தில் உணர்ச்சி உண்டாகும் அல்லவா? எதை எதையோ பேசுவதற்கு இடையிலே,"அயில் வேலன் கவியை"ப் பேச வகை அவனருளால் வந்தது என்று எண்ணினேன். அதுவே இப்பணியில் புகுவதற்குரிய தலைமையான காரணம். இந்தச் சொற்பொழிவுத் தொடர் 25.1.1956 அன்று தொடங்கியது.