பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/121

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 1

ஆணும் பெண்ணுமாய் இரட்டை இரட்டையாகவே வாழும்; கணமும் ஒன்றைவிட்டு ஒன்று பிரியாமல் இருக்கும். அந்தப் பறவையைக் காதலுக்கு எடுத்துக்காட்டாகச் சொல்வது வழக்கம். அதன் பெயரை உடையது கிரெளஞ்ச மலை. கெட்டவர்கள் நல்ல பேரோடு நல்லவர்களைப் போல தோற்றம் அளிப்பதுண்டு. அதை இது நினைவூட்டுகிறது. பிறருக்குத் தீங்கு செய்யும் கயவர்கள், மனிதர்களைப் போலவே இருப்பார்கள் என்று சொல்லுகிறது திருக்குறள். தாமரை போன்ற முகம் உடையவள் என்கிறோம். தாமரைக்கும் முகத்துக்கும் வேறுபாடு தெரியும். தம்பி மாதிரியே அண்ணன் இருக்கிறான் என்றால், தம்பி வேறு, அண்ணன் வேறு என்று தெரியும். ஒப்பாகச் சொல்லும் பொருள்களுக்குள் வித்தியாசத்தை அறிந்து கொள்ளலாம். ஆனால் நல்லவர், பொல்லாதவர் என்ற இருவருக்குள்ளும் வேறுபாடே தெரியாதாம்.
   "மக்களே போல்வர் கயவர் அவரன்ன
   ஒப்பாரி* யாம் கண்டது இல்"
என்பது குறள். யார் கயவர் என்பதைக் கண்டுகொள்ள முடியாது. முன் ஒரு நாள் மெய்ப்பொருள் நாயனாரின் வரலாற்றைச் சொன்னேன். நாயனாரைக் கொல்ல வந்த கயவன் முத்திநாதன் சிவனடியாரைப் போலவே வேஷம் தாங்கி வந்தான். உண்மையான சிவனடியார்கூடத் திருநீற்றை உடல் எல்லாம் பூசிக் கொண்டு வேஷம் போட மாட்டார். ஆனால் முத்திநாதன் மெய்யெல்லாம் விபூதி பூசி, ருத்திராட்சம் போட்டுக் கொண்டு வந்தானாம். இப்படிப் புறத்திலே வேஷம் போட்டு வந்த அந்தக் கயவன் மெய்ப்பொருள் நாயனாரைக் கொன்றான்.

கிரெளஞ்சாசுரன் காதல் உள்ளம் படைத்த அன்றிலைப் போலக் காட்சி அளித்தான். காதல் ஒட்டுவது; பகை வெட்டுவது. காதலுக்கு உதாரணமாகிய அன்றில் பறவையைப் போலப் புறத்திலே தோற்றம் அளித்த அவன், ஒர் அழகான மலைபோல் நின்றான், புலி பசுத்தோலைப் போர்த்துக் கொண்டதுபோல். பலர் உண்மையான மலை என்று எண்ணினார்கள். தவம் செய்வதற்குரிய அழகான இடம் என்று எண்ணிச் சிலர் அந்த மலையில்

ஒப்பாரி* - ஒப்பு

112