பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/124

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
வேலின் பெருமை

சம்பத்தாகிய நல்ல குணங்களும் இருக்கின்றன. சூரபன்மனுடைய தாயின் பெயர் மாயை. மாயையின் பிள்ளைதான் சூரன். மாயையின் பிள்ளைகளே தீய குணங்கள்.

அந்த மாயையின் பிள்ளையாகிய சூரன் தேவர்கள் தம் நல்ல காரியங்களைச் செய்யவொட்டாமல் தடுத்துச் சிறையில் போட்டுப் பலவிதமான துன்பங்களைச் செய்தான். நம் மனத்திலே இருக்கிற மாயையின் பிள்ளைகளாகிய காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சரியம் ஆகிய தீய குணங்களோ பிறருக்குத் தீங்கு விளைவிக்காமை, பிறருக்கு உபகாரம் செய்தல், பிறரிடம் அன்பு பாராட்டுதல் முதலியவற்றிற்குக் காரணமான நல்ல குணங்களை அடக்கி, ஆன்மாக்களுக்கு மிகுந்த துன்பத்தை விளைவித்து வருகின்றன. தேவர்களுடைய வாழ்க்கையிடம் போல இருக்க வேண்டியது நம் மனம். ஆனால் அது அசுரர்களின் பூமியாகிவிட்டது. அதனால் ஆன்மாக்கள் விடுதலை பெறாமல் துன்பம் அடைகின்றன. அது மாற வேண்டுமானால் தீய குணங்கள் மாற வேண்டும். அசுரர்களுடைய ஆளுகைக்கு உட்பட்டிருக்கிற மனம், தேவர்களுடைய லோகம் ஆக வேண்டும். சூரனைத் தேவர்களால் அழித்துவிட முடியாது. அதற்கு ஏற்ற ஆற்றல் அவர்களிடம் இல்லை. அதைப்போலவே நம்முடைய மனத்தில் தோன்றுகிற தீய குணங்களை நாமே அழித்துவிட முடியாது. அதற்கு ஏற்ற ஆற்றல் நமக்கு இல்லை. இறைவன் அருளால் ஞானம் ஏற்பட்டு அவை அழிய வேண்டும். முருகன் கையில் உள்ள வேல் ஞான உருவுடையது; ஞான சக்தி.

இருவகைக் கருணை

தேவர்களுக்கு அசுரர்களை அழிக்கும் ஆற்றல் இருந்தால் அவர்கள் இறைவனை மதிக்க மாட்டார்கள்; மிக்க அகங்காரம் உடையவர்கள் ஆகிவிடுவார்கள். உண்மையில் ஆண்டவன் அசுரர்களைச் சிருஷ்டித்ததே, தன் புகழைத் தேவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டுமென்பதற்காகத்தான். நல்லதைக் கேட்கின்ற குழந்தைகளுக்கு நல்லதை அளிக்கும் தாயாகவும், கெட்ட காரியங்களைச் செய்கின்ற குழந்தைகளை அடித்து உதைத்து அவர்களை நல்வழிப்படுத்துகின்ற தாயாகவும் இறைவன் இருக்கின்றான். அறக் கருணை உடையவனாகவும், மறக் கருணை

115