பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/125

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 1

உடையவனாகவும் அவன் இருக்கிறான். அணைத்துக் காப்பாற்றுவது அறக்கருணை; அடித்துக் காப்பாற்றுவது மறக் கருணை. அசுரர்களை அழித்ததுவும் கருணையே; மறக்கருணை.
   "வானம்எங் கே? அமுத பானம்எங் கே? அமரர்
     வாழ்க்கைஅபி மானம்எங்கே?
   மாட்சிஎங் கேஅவர்கள் சூழ்ச்சிஎங் கே?தேவ
     மன்னன்அர சாட்சிஎங்கே?
   ஞானம்எங் கேமுனிவர் மோனம்எங்கே?அந்த
     நான்முகன் விதித்தல்எங்கே?
   நாரணன் காத்தலை நடாத்தல்எங் கே?மறை
     நவின் றிடும் ஒழுக்கம்எங்கே?
   ஈனம்அங் கேசெய்த தாரகனை ஆயிர
     இலக்கமுறு சிங்கமுகனை
   எண்ணரிய திறல்பெற்ற சூரனை மறக்கருணை
     ஈந்துபணி கொண்டிலைஎனின்
   தானம்இங் கேர்சென்னைக் கந்தகோட்
     டத்துள்வளர் தலம்ஓங்கு கந்தவேளே
   தண்முகத் துய்யமணி உண்முகச் சைவணி
     சண்முகத் தெய்வமணியே"
என்று இந்த மறக் கருணையை அருட்பிரகாச வள்ளலார் பாராட்டுகிறார்.

இரண்டு நோயாளிகளுக்கு நோய் வந்தது. இரண்டு பேருடைய நோயையும் குணப்படுத்துபவன் ஒரே மருத்துவன் தான். ஆனால் அவன் ஒருவனுக்கு மருந்தைத் தேனிலே குழைத்துச் சாப்பிடும்படி சொல்கிறான். மற்றவனுக்கோ கத்தியை எடுத்து உடலை அறுத்துச் சிகிச்சை செய்கிறான். "ஏன் எனக்கும் தேனிலே மருந்து கலந்து கொடுக்கக் கூடாது?" என்றால், அவனுக்கு ஏற்பட்ட நோய் இவனுக்கு வந்த வியாதியைப் போன்றது அன்று. ஜூரம் வந்தால் அவன் கொடுக்கிற ஒரு வேளை மருந்திலே சரியாகிவிடும். புற்றுநோய் வந்துவிட்டால் மிக்ஸர் கொடுத்தால் போதாது; ரணசிகிச்சைதான் பண்ண வேண்டும். டாக்டருடைய எண்ணம் இரண்டு பேருடைய நோயையும் குணப்படுத்த வேண்டுமென்பதுதான்.

116