பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/13

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
முகவுரை


என்னுடைய அன்பரும் நல்ல பக்தருமாகிய ஸ்ரீ அனந்தன் அவர்கள் ஒவ்வொரு வாரமும் நான் பேசுவதைச் சுருக்கெழுத்தில் எடுத்து மீட்டும் தட்டெழுத்தில் பெயர்த்துத் தரும் அரிய உபகாரத்தைச் செய்ய முன்வந்தார். அவராகவே அன்பு வைத்து இதனைச் செய்யத் தொடங்கினார். அவர் அப்படிச் செய்வதை அறிந்த அமுத நிலையத் தலைவரும் என் கெழுதகை நண்பருமாகிய ஸ்ரீ ரா. ஸ்ரீ. ஸ்ரீகண்டன் அவர்கள் அவர் எழுதுபவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார். அவர் விருப்பப்படியே இந்த வெளியீடுகள் இப்போது உருவாகின்றன.

கந்தர் அலங்காரப் பாடல்களுக்கு மாத்திரம் விளக்கம் எழுதினால் அது இவ்வளவு விரியாது. சொற்பொழிவுகளாக ஆற்றியதால் சொல் விளக்கமும், பொருள் விளக்கமும் இருப்பதோடு, உவமை, உதாரணம், மேற்கோள், தத்துவம், பழங்கதை, ஒப்புமை, அநுபவச் செய்தி ஆகியவற்றையும் இவற்றில் காணலாம். பேசும்போது கேட்டதையே படித்தால், கேட்கும்போது இருந்த சுவை ஓரளவு குறையும். சில இடங்களில் பன்னிப் பன்னிச் சொன்னதுபோலத் தோற்றும். ஓரிடத்தில் சொன்ன செய்தியே வேறு ஓரிடத்தில் வருவதும் கூடும். ஆயினும் சொற்பொழிவு நடையாகவே இருக்கட்டும் என்ற நினைவினால் அவற்றை நான் சுருக்கவில்லை. ஒரு முறை இவற்றைப் பார்த்துக் சிறிதளவே செப்பஞ் செய்து, வெளியிடக் கொடுத்து விட்டேன்.

இது புதுவகையான முயற்சி. அன்பர்கள் நன்றாக இருக்கிறதென்றால் முயற்சி வெற்றி பெற்றது என்று மகிழ்வேன். அன்பர்களின் கருத்தைத் தெரிந்து கொண்டால் அதற்கு ஏற்றபடி செய்யலாம் என்று தோன்றுகிறது. இந்த முயற்சி உருவாக அருளிய முருகன் திருவருளை வழுத்துகிறேன்.

என் சொற்பொழிவுகளை ஒரு மணி, ஒன்றரை மணி நேரம் தொடர்ந்து சுருக்கெழுத்தில் எடுத்து மீட்டும் தட்டெழுத்துருவில் வடித்துத் தரும் அன்பர் ஸ்ரீ அனந்தனுடைய பேரன்புக்கு என்ன கைம்மாறு செய்வது? அவருடைய உதவியே இந்த வரிசைக்கு உரமூட்டுகிறது. அவருக்கு என் நன்றியறிவைத் தெரிவித்துக் கொள்கிறேன்.