பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/132

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 1

மூன்றாவது அவருடைய சமரச இயல்பு. தேவாரம், திவ்யப் பிரபந்தமாகிய அருள் நூல்களிற்கூட ஏனைய சமயத்தார் உள்ளம் புண்படும் இடங்கள் இருக்கலாம். ஆனால் அருணகிரிநாதர் பாடல்களில் எல்லாத் தெய்வங்களும் போற்றப் பெறுகின்றனர். சாதன வகைகளாகிய சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நான்கைப் பற்றிய செய்திகளையும் அவற்றில் காணலாம். வடமொழி தென்மொழி இணைப்பு, பழமை புதுமை இணைப்பு, இசை இயல் இணைப்பு, சைவ வைணவ இணைப்பு, யோக ஞான இணைப்பு, உலகியல் பதியியல் இணைப்பு முதலிய பல இணைப்புகள் அருணகிரியார் திருவாக்கில் ஒளிவிடும். காழ்ப்பின்றி யாவரையும் தழுவிக் கொண்டு சமரச நெறியிலே வாழ்வதை விரும்பும் இக்காலத்துச் சான்றோர்க்கு உவப்பைத் தருவது அவர் பாடல்.

இந்தப் பண்புகள் அனைத்தும் கந்தர் அலங்காரத்தில் விரவியிருத்தலைக் காணலாம். இதில் உள்ள பாடல்கள் கட்டளைக் கலித்துறை என்னும் கலிப்பா இனத்தைச் சேர்ந்தவை. ஆயினும் பல பாடல்களில் சந்த அமைதி இருக்கிறது.

“சேராநிட் டூரனைச் சூரனைக் காருடற் சோரிகக்கக்
கூரகட் டாரியிட் டோரிமைப் போதினிற் கொன்றவனே"

என்ற பாட்டினில் தானனத் தானனத் தானனத் தானனத் என்ற சந்தம் அமைந்திருக்கிறது. வேறு சில பாடல்களும் உண்டு.

சிவபுராணச் செய்திகளும் கந்த புராண வரலாறுகளும் பாரத ராமாயணத்தில் வரும் நிகழ்ச்சிகளும் திருப்புகழிலும் உண்டு; மற்ற நூல்களிலும் உண்டு.

இந்தப் புத்தகத்தில் நான்கு பாடல்களுக்குரிய விளக்கங்கள் இருக்கின்றன. ஐந்து பகைவர், குறிஞ்சிக் கிழவன், தனிப்பரமானந்தம், பேய் விளையாட்டு என்ற தலைப்பில் அவ்விளக்கங்கள் இதில் உள்ளன. பாட்டின் பொருளை மாத்திரம் பதவுரையாகவோ பொழிப்புரையாகவோ எழுதிவிடுவது மிக எளிது. இந்த நான்கும் சொற்பொழிவாகச் செய்த விளக்கம். ஆதலால், சொல்லுக்குப் பொருள் உரைப்பதோடு நில்லாமல் அங்கங்கே உள்ள பொருள்களை வேறு செய்திகளோடு சார்த்தி விளக்கும் முறையில் இச்சொற்பொழிவுகள் அமைந்திருக்கின்றன.

124