பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/133

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
முகவுரை

கந்த புராணத்திலுள்ள வரலாறுகள் வருமிடங்களில் அவற்றின் உள்ளுறையை என் அறிவுக்குப் புலனாகிய அளவுக்கு விளக்கியிருக்கிறேன். நம் நாட்டில் வழங்கும் புராணங்களில் வரும் கதைகள் நம்பத்தகாதன, குருட்டு நம்பிக்கையினால் எழுந்தன என்று சிலர் சொல்லுவார்கள். மனித ஆற்றலுக்கு அப்பாற்பட்ட நிகழ்ச்சிகளை வைத்துப் புனைந்த கற்பனைக் கதைகள் பல உண்டு; அத்தகைய அபூத கற்பனைகளில் வரும் நிகழ்ச்சிகள் முன்பு நடந்தவை அல்ல; இனியும் நடக்கப் போவன அல்ல. ஆனாலும் அவற்றைப் படித்து இன்புறுகிறார்கள் இக் காலத்து மக்கள். கதைகளில் பாத்திரங்களின் இயல்புகளும் அடிப்படையான உண்மைகளும் உள்ளுறையாக அமைந்திருப்பதால் அவற்றைத் தெரிந்து மகிழ்ச்சியடைகிறார்கள். அதே தெளிவு புராணக் கதைகளிலும் காணலாம். அவற்றிலுள்ள வரலாறுகள் அனைத்தும் அப்படியே நிகழ்ந்தன என்று கொள்ள வேண்டியது இன்றியமையாததன்று. அவற்றினூடே உள்ள கருத்துக்களை, அக்கதைகள் எந்த உண்மையை வெளிப்படுத்த அமைந்தனவோ அந்தக் குறிப்புக்களை, உணர்ந்தால் இப்போது தோன்றும் அபூத கற்பனைகளைச் சுவைப்பது போலவே புராணக் கதைகளையும் சுவைக்கலாம்.

புராணத்தில் வரும் கதைகள் இந்த நாட்டுக்கு மாத்திரமே உரியன என்பதற்கும் இல்லை. எல்லா நாடுகளிலும் எல்லாச் சமயங்களிலும் எல்லா மொழிகளிலும் இத்தகைய கதைகள் உண்டு. இந்தக் கதைகளை எண்ணித் தங்கள் சமய நெறிகளை இழிவாகக் கருதுபவர் யாரும் இல்லை. மற்ற நாட்டுக் கதைகளினூடே உள்ளுறை இருக்கிறதோ இல்லையோ, திட்டமாகச் சொல்ல இயலாது. இந்த நாட்டுக் கதைகளுக்கு நிச்சயமாகத் தத்துவார்த்தம் உண்டு. மூர்த்திகளின் உருவ வேறுபாடுகளுக்குத் தனித்தனியே உள்ளுறை உண்டு, கோயிலின் அமைப்புக்கும், வழிபாட்டு முறைக்கும், விழாக்களுக்கும், கடவுளின் பல்வேறு திருஉருவங்களுக்கும், திருவிளையாடல்களுக்கும் உள்ளே நுட்பமாக அமைந்த கருத்துக்கள் உண்டு. அக்கருத்துக்களை கருவாகக் கொண்டு உருவெடுத்தவை அவை. பொதுவாக இந்திய நாட்டின் கலைகள் யாவுமே உள்ளுறையுடன் அமைந்த

125