பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/139

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
ஐந்து பகைவர்

சொந்தமா? அல்லது சொந்தக்காரர் வேறு யாரேனும் இருக்கிறாரா? இந்த உடம்பு உயிருக்குச் சொந்தம் என்றால் உயிர் நினைத்தபடி உடம்பு அமைய வேண்டும். நமக்குச் சொந்தமான வீட்டில் இரண்டடுக்குகள் இருக்கின்றன; நாம் விரும்பினால் மூன்று அடுக்கு மாளிகையாக அதைக் கட்டிக் கொள்ளலாம். நமக்குப் பிள்ளை அதிகமானாலும், மருமகப்பிள்ளை வீட்டுக்கு வந்தாலும் இன்னும் இரண்டு மூன்று அறைகள் தடுத்துக் கொள்ளலாம். வீட்டுக்குச் சொந்தக்காரர் தம் விருப்பப்படி அதில் பலவிதமான மாறுதல்களைச் செய்து கொள்ள முடியும்.

உயிரின் விருப்பப்படியே இந்த உடம்பில் வேண்டிய மாறுதல்களைச் செய்து கொள்ள முடியுமா? செவிடாகப் பிறந்த ஒருவர் அந்த செவிட்டை நீக்கிக் கொள்ள முடியுமா? நமக்கு இரண்டு கைகள் போதவில்லை; பன்னிரண்டு கைகள் வேண்டு மென்று விரும்பினால் பாக்கிக் கைகளை ஒட்டிக் கொள்ள முடியுமா? பிறவி ஊமையாகப் பிறந்த ஒருவன் பேச்சில் வல்லவன் ஆக முடியுமா? ஆகையால் இந்த உடம்பு நமக்குச் சொந்தம் அன்று என்றே தெரிந்து கொள்ள வேண்டும். இதில் நாம் குடியிருக்கிறோம். வீட்டைப் படைத்தவன் எந்த எந்த மாதிரியாகப் படைத்தானோ அதில் சிறிதளவுகூட மாற்றம் செய்ய முடியாது. இப்படி இருந்தும் இந்த உடம்பு நமக்குச் சொந்தம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

நமக்கு என்று ஒன்று இருந்தால் அதில் என்ன என்ன இருக்கின்றனவென்று நமக்கு தெரியாதா? நாம் ஒரு பெட்டியை வாங்கிக்கொண்டு வருகிறோம். அதில் பல பொருள்களை வைத்துக் கொண்டிருக்கிறோம். அந்தப் பெட்டி நம்முடைய தாதலால், அதில் பல பொருள்களையும் வைத்தவர் நாமாதலால், எப்போது கேட்டாலும் அந்தப் பெட்டியில் என்ன இருக்கின்றன என்று நம்மால் சொல்ல முடியும். இந்த உடம்பு நமக்குச் சொந்தம் என்றால் இதற்குள் என்ன இருக்கின்றன என்று சொல்ல நமக்குத் தெரிய வேண்டாமா? வயிற்று வலி வந்தால் அது எப்படி வந்தது என்று நமக்குத் தெரிவதில்லை. டாக்டரிடம் போய்க் காட்டுகிறோம். அவருக்கும் தெரிவதில்லை. எக்ஸ்ரே எடுக்க வேண்டுமென்கிறார். எக்ஸ்ரேக்கும் தெரியாமல் எத்தனையோ வியாதிகள் இருக்கின்றன. அது கிடக்கட்டும். இந்த உடம்புக்குள் எத்தனை புழுக்கள் இருக்கின்றன தெரியுமா? அதுவும் தெரியாது.

131