பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/141

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
ஐந்து பகைவர்

தகர தப்பாவை வைத்துக் கொண்டு கர்ணகடோரமான ஒலியை எழுப்புகிறான். கேட்டால், "இது என் வீடு. என் விருப்பப்படி என்ன வேண்டுமானாலும் செய்வேன்" என்று பேசுகிறான். மைசூருக்குப் போய் நல்ல மணமுள்ள ஊதுவத்தியை அவர் வாங்கி வந்திருந்தார். ஆண்டவன் படத்திற்கு முன்னாலே உட்கார்ந்து கொண்டு தியானம் செய்யும்போது, அந்த வத்தியைக் கம்மென்று மணக்கும்படி ஏற்றி வைத்திருந்தார். அதே சமயத்தில் ஜமீன்தாரின் மற்றொரு பிள்ளை அவர் வீட்டு ஜன்னலுக்குப் பக்கத்தில் நின்றுகொண்டு மொத்தமான சுருட்டு ஒன்றைப் புகைக்கிறான். இருக்கிற நாற்றம் போதாது என்று புகையிலைச் சுருட்டு நாற்றத்தை வேறு விடுகிறான். அது அவர் மூக்கில் ஏறித் தலைவலி எடுக்கிறது. கேட்டால், "இது என் வீடு. என் விருப்பப்படி சுருட்டுக் குடிக்க எனக்கு உரிமை உண்டு" என்று அவன் பேசுகிறான். அந்த வீட்டின் வாயிலிலே அழகழகான வண்ணக் கோலங்களைக் குடியிருக்கிறவர் போடுகிறார். அடுத்த கணம் ஜமீன்தாரின் மற்றொரு பிள்ளை வாளி நிறையத் தண்ணீரைக் கொண்டு வந்து அதில் கொட்டிக் கோலம் அழிந்து போகும்படி செய்கிறான். கேட்டால் "இது என் வீடு. என் விருப்பப்படி வீதியில் தண்ணிர் கொட்டுவேன். அதைக் கேட்க நீர் யார்?" என்று பேசுகிறான். நல்ல தென்றல் காற்று வருகிறதே என்று அவர் தம் வீட்டு ஜன்னலின் பக்கம் உட்கார்ந்து கொண்டு திருப்புகழைக் கொஞ்சம் படிக்கலாம் என்று ஆரம்பிக்கிறார். ஜமீன்தாரின் மற்றொரு பிள்ளை ஜன்னலை அடைக்கச் சொல்லுகிறான். அவன் சினிமாக் காட்டப் போவதால் இருட்டாக இருக்க வேண்டுமென்கிறான். கேட்டால், "இது என் வீடு. என் விருப்பப். படி நடக்கத்தான் வேண்டும்" என்று பேசுகிறான்.

அந்த வீட்டில் அவர் மாதந்தோறும் குடிக்கூலி கொடுத்துக் கொண்டு இருந்தாலும், தம் விருப்பப்படி திருவாசகம் கேட்பதற்கு தடை உண்டாகிறது. அவர் விருப்பப்படி ஊதுவத்தியை ஆண்டவன் சந்நிதானத்திலே ஏற்றி வைத்து, அதன் நறுமணத்தை அநுபவிப்பதற்குத் தடை உண்டாகிறது. அவர் விருப்பப்படி அழகான கோலங்களைப் போட்டு அதனைப் பார்த்துக் களிக்கக் கூடிய காட்சிக்குத் தடை உண்டாகிறது. அவர் விருப்பப்படி நல்ல தென்றல் காற்றை அநுபவிக்க முடியாமல் போகிறது.

i33