பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/148

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கந்தரலங்காாச் சொற்பொழிவுகள் - 1

பொறிகளின் மூலம் அநுபவிக்க விரும்பினால், அப்படியே அநுபவி. ஆனால் அதில் ஒரே ஒரு சின்ன மாறுதல் செய்ய வேண்டும். ஐந்து புலன்களை அவ்வவ் வழியே போகவிடு. அவ்வாறு போக விடுவதில் ஒரு ஒழுங்கு இருக்கட்டும்" என்று நம் பெரியோர்கள் நமக்குச் சொன்னார்கள்.

மாடும் முளையும்

ரு கொண்டி மாடு இருக்கிறது. அதை அவிழ்த்து விட்டால் வயல்களில் போய் மேய்ந்து பயிர்களை அழித்துவிடுகிறது. அதனைக் கட்டிப் போட்டே வைத்தால் பயனில்லை. அதை மேயவும் விட வேண்டும். பயிர் பச்சைகளை அழித்துவிடாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும். இதற்கு என்ன வழி?

பழைய காலத்தில் பசுக்கள் மேய்வதற்காக என்று ஒவ்வோர் ஊரிலும் மேய்ச்சல் தரை ஒதுக்கியிருப்பார்கள். அதற்குக் 'கற்றாப் புல்' என்று பெயர். கல்வெட்டுக்களால் இது விளங்குகிறது. அந்த மாட்டைப் புல் தரையில் மேயட்டும் என்று அவிழ்த்து விட்டால், அது அந்தத் தரையிலுள்ள புல்லை மேயாமல், வயலில் இறங்கிப் பயிர்களை அழிக்கிறது. அந்த மாடு புல் தரையில் மேயவும் அதே சமயத்தில் அப்பால் இருக்கிற வயலில் இறங்கிப் பயிரை அழிக்காமல் இருக்கவும் மாட்டுக்காரன் என்ன செய்கிறான்? அந்த மைதானத்தின் நடுவே ஒரு முளையை அடித்து, நீளமான கயிற்றினால் மாட்டைக் கட்டி, அந்தக் கயிற்றின் மறு முனையை இந்த முளையில் கட்டி விடுகிறான். மாடு துள்ளித் துள்ளிக் குதிக்கிறது; ஒடுகிறது. எவ்வளவு தூரம் ஓட முடியும்? கயிறு எவ்வளவு நீளமோ அவ்வளவு நீளந்தானே ஒட முடியும்? முரட்டு மாடு ஆகையால் அது வேகமாக ஒடுகிறது. கயிறு நீளமாக இருப்பதால் தாராளமாக ஓட முடிகிறது. ஆனால் எத்தனை ஓடினாலும் அது முளையைச் சுற்றி சுற்றித்தான் ஓட முடியும். அது ஓட ஓடக் கயிறு முளையில் சுற்றிக் கொண்டே வருகிறது. கயிறு சுற்றச் சுற்ற மாட்டுக்கும் முளைக்கும் உள்ள தூரம் குறைந்து கொண்டே வரும். மாடு முளையை நெருங்கி வரும்; முளைக்கு அருகிலேயே வந்து விடும். பாக்கியிருப்பது இரண்டடி நீளமுள்ள கயிறுதான் என்றால் பின்னும் சுற்றும்போது, கயிறு குறுகிவிடுகிறது. அது நெறிக்க மாடு அப்படியே முளையின் அடியில் படுத்துக் கொண்டுவிடுகிறது.

140