பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/154

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 1

செய்யக்கூடிய காரியங்களையே எண்ணுவார்கள். அவற்றைச் செயலிலே ஆற்ற முயற்சி செய்வார்கள். அந்த முயற்சிக்கு எவ்வளவு இடையூறு வந்தாலும் அஞ்ச மாட்டார்கள். தங்கள் முயற்சியிலே கொஞ்சமேனும் தளரமாட்டார்கள்.

"நான் எல்லாவற்றையும் செய்துவிடுகிறேன்" என்று நாம் அளக்கிறோமே அப்படி அவர்கள் அளக்க மாட்டார்கள். நூறு ரூபாய் தருகிறேன் என்று சொன்னால் கொடுப்பதற்கு நூறு ரூபாய் இருக்கிறதா என்று யோசித்துப் பார்த்துக் கொண்டு சொல்ல வேண்டும். பின்னர் நூறு ரூபாய் இல்லையென்பதற்காக வேறு ஒரு பொருளை அதற்குச் சமமாகக் கொடுப்பதில் பயன் இல்லை.

"உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்
உள்ளத்து ளெல்லா முளன்"

என வள்ளுவர் பெருமான் கூறுகிறார்.

மகாத்மா காந்தியடிகளை வெவ்வேறு கட்சிக்காரர்களும் கொள்கை அளவில் எதிர்த்தாலும், சொல்கிற முறை தவறு என்று சொல்லியிருந்தாலும், அவரை நல்லவர் என்று எல்லோரும் பாராட்டினார்கள். அவர் தம் மனத்தில் தோன்றியதைச் சொல்வார். தம் மனத்திலே நினைப்பதைச் செய்வார். தாம் செய்வதையே பிறருக்கும் சொல்வார். அவரிடம் நினைப்பு வேறு, சொல் வேறு, செயல் வேறு என்பதே இல்லை. ஒரே சுவட்டில் இந்த மூன்றும் செல்லுகிற அற்புதமான வாழ்க்கை வாழ்ந்தவர் அவர் சத்தியத்தையே நினைந்து, நினைந்த சத்தியத்தையே செய்துகாட்டி, அந்த மெய்ச் செயலையே பிறருக்கும் உபதேசம் செய்த மகாத்மா உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் இன்றைக்கு உறைந்துவிட்டார். அப்படிப்பட்ட சத்தியவான்கள் ஒவ்வொரு சமயம் தம் சக்திக்கு அப்பாற்பட்ட எண்ணங்களை எண்ணினாலுங்கூட, அவை அவர்கள் நினைந்த வண்ணம் நடந்து விடும்.

முதலிலே, செய்யக்கூடியவற்றையே நினைக்கும் பக்குவம் வந்துவிட்டால், பிறகு நினைத்தன எல்லாவற்றையும் செய்யும் பக்குவம் வரும். அந்தப் பக்குவம் வருவதற்கு மனத்திண்மை வேண்டும். இந்த மனத்திண்மை ஒரு நாளில் வராது. பொறிகளை வசப்படுத்தி, நினைப்பையும் சொல்லையும் செயலையும் ஒரு நெறியிலே செலுத்த அந்தத் திண்மையே வேண்டும்.

146