பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/16

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.


அருணகிரியார் செய்த அலங்காரம்

1

றைவன் திருவருளினால் உலகத்தில் திரு அவதாரம் செய்த அருணகிரி நாதரைப் பற்றிப் பலர் பலவிதமான கதைகளைச் சொல்லுகிறார்கள். அந்தக் கதைகள் அனைத்துக்கும் சான்று உண்டு என்று சொல்ல இயலாது. திருப்புகழைக் கொண்டு பார்த்தால் அருணகிரி நாதப் பெருமானைப் பற்றிய செய்திகள் பல தெரியவரும். அவர் பலவிதமான கலைகளிலும் வல்லவர், சிறந்த நூற்பயிற்சி மிக்கவர், இறைவன் அருட் காதலில் மீதுர்ந்தவர், அவனருளாலே அவன் தாளைப் பணிந்து சிறந்தவர், ஆண்டவனது திருவடியை அடைந்து இன்புற்றவர் என்று தெரியவரும். திருப்புகழ், திருவகுப்பு, கந்தர் அலங்காரம், கந்தர் அநுபூதி, கந்தர் அந்தாதி ஆகிய அழகான நூல்களிலிருந்து இவற்றை ஒருவாறு அறியலாம். அந்த நூல்களால் அவர் பல சாஸ்திரம் அறிந்தவரென்று தெரியவரும்; ஞானம் பெற்றவரென்று தெரியவரும். சரியை முதலிய மார்க்கம் அறிந்தவரென்பதும், தலங்களின் சிறப்பை உணர்ந்தவரென்பதும் அறிந்து கொள்ளலாம். பலவகையான செய்திகளை அவர் அறிவார். உலா, கோவை போன்ற பிரபந்தங்களிலும் அவருக்குப் பழக்கம் உண்டு. சங்ககால நூல்களிலும் பயிற்சி உண்டு. இவற்றை அறிந்து கொள்வதற்குரிய பல குறிப்புக்களை முன் சொன்ன அவர் நூல்களிற் காணலாம்.

அருணகிரிநாதப் பெருமானை இனி நாம் காண முடியாது. ஆனால் அப்பெருமான் திருவாய் மலர்ந்தருளிய நூல்கள் இன்றும் இருக்கின்றன. அவற்றினூடே புகுந்து பார்க்கும்போது அவர், திருவருட்பேற்றை அடைந்தவர் என்பதை நாம் உணர்ந்து கொள்ள முடியும். தமிழ் நாட்டிலுள்ள நூல்களிற் பெரும் பாலானவை இறைவனைப் பற்றியவையே இறைவனைப்