பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/163

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
ஐந்து பகைவர்

அவனுக்கு நாம் அருள் செய்யச் சந்தர்ப்பம் ஏற்படாதா?’ என்று கருதியே சென்றான். சூரனுக்குத் துணையாக இருந்த கிரெளஞ்ச மலை முருகன் கைவேலின் கூரினால் அணு அணுவாகிக் குலைந்துவிட்டது. அவனுடைய படை வியூகங்கள் சின்ன பின்னமாகிவிட்டன. அவன் மகன் பானுகோபன் மாண்டுவிட்டான். சிங்கமுகாசுரன் மடிந்துவிட்டான். இவற்றைக் கண்டாவது சூரன், இறைவன் வீரத்தை உணர்ந்து அஞ்சி அவன் காலிலே வீழ்ந்தானா? விழவில்லை. முருகனை எதிர்த்துப் போராடப் போர்க்களத்திற்கு வந்துவிட்டான். அவன் தைரியம் என்ன தைரியம்? அசட்டுத் தைரியம். தன் படைப்பலம் கொண்டு பிறரை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று எண்ணி இறுமாந்து வந்தான். தன் படைகள் அழிந்து போன பிறகும் தன் பலத்தின் அளவையும் முருகன் பெருமையையும் உணராமல் எதிர்க்கத் துணிந்தான். இது முரட்டுத் துணிவு.

சூரனைச் சோரன் என்கிறார் அருணகிரியார். தேவர்களுக்கு உரிய வாழ்வைப் பறித்தவன் அல்லவா? அவன் கொடுமையை உடையவன்; நிட்டுரன். தன் படைப்பலம் கொண்டு பிறருக்கு நன்மை செய்யாததோடு யாவருக்கும் கொடுமை செய்வதையே தொழிலாக அவன் கொண்டான். அவன் பிறருக்கு இழைத்து வந்த துன்பத்திற்கு ஏற்ற தண்டனை கிடைத்தது. ஆண்டவனது திருக்கரத்திலே உள்ள வேல் சூரனது 'காருடல் சோரி கக்கும்படி’ யாகப் பாய்ந்தது. சோரி - ரத்தம். காருடல் - கன்னங்கரேல் என்று கறுப்பாக இருந்த உடல். கறுப்பு, அஞ்ஞானத்தின் அடையாளம். ஞானத்தின் அடையாளம் செம்மை. அஞ்ஞான மயமான சூரனது கரிய உடல் சிவப்பு ரத்தம் கக்கும் படியாக வேல் பாய்ந்தது. முருகன் அவனைக் கூர்மையான கட்டாரி இட்டுக் கொன்றான். கட்டாரி என்றால் குத்து ஈட்டி. இங்கே வேலையே அப்படிச் சொன்னார். அது கட்டாரியைப் போலக் குத்த உதவுவது.

சோரநிட் டூரனைச் சூரனைக்
காருடல் சோரிகக்கக்
கூரகட் டாரியிட்டு ஒரிமைப்
போதினில் கொன்றவனே
155