பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஐந்து பகைவர்

திற்கே சென்று, அவனது கரிய உடல் இரத்தம் கக்கும்படியாக உன்னுடைய கட்டாரியைப் போன்ற கூர்மையான வேலை விட்டு, அவனை ஒரு நொடிப் பொழுதினில் கொன்றாய். தேவர்களுடைய ராஜ்யத்தைத் திரும்பவும் வாங்கிக் கொடுத்தாய். அதை போல எனக்கு நீ உதவி செய்யக் கூடாதா? எனக்கு இந்த உடம்பாகிய வீட்டில் சுயராஜ்யம் கிடைக்கும்படியாகச் செய்யக் கூடாதா? உரிமை வாழ்வு எனக்கு அருளக் கூடாதா? என்னுடைய ஐந்து பொறிகளும் எனக்கு அளிக்கின்ற துன்பம் கொஞ்சநஞ்சம் அல்லவே! நான் உன்னை ஒரலாம் என்றாலும், உன்னலாம் என்றாலும், மலரிட்டு உன்தாள் சேரலாம் என்றாலும் இவர்கள் என்னை விடமாட்டோம் என்கிறார்களே உன்னிடம் சொல்லாமல் வேறு யாரிடத்தில் போய் நான் முறையிட முடியும்? யான் என்ன செய்வது?" என்று இந்தப் பாட்டிலே முறையிடுகிறார் அப்பெருமான்.

இந்தப் பாட்டின் பின் இரண்டியில் சந்தநயம் அமைந்திருக்கிறது.

ஒரஒட் டார்; ஒன்றை உன்னஒட்
டார்; மலர் இட்டுனதாள்
சேரஒட் டார்ஐவர் செய்வதென்
யான்? சென்று தேவர்உய்யச்
சோரநிட் டூரனைச் சூரனைக்
காருடல் சோரிகக்கக்
கூரகட் டாரிஇட் டோர்இமைப்
போதினிற் கொன்றவனே!

(ஐம்பொறிகளாகிய பகைவர் உன் சம்பந்தமான எண்ணங்களை எண்ண விடுவதில்லை; ஒன்றைக் கூர்ந்து சிந்திக்க ஒட்டுவதில்லை; மலர் தூவி உன் தாளைத் தியானிக்க விடுவதில்லை. யான் என்ன செய்வது? அசுரர்கள் உள்ள இடத்துக்குச் சென்று தேவர்கள் உய்வை அடையும் படியாக, கள்வனும் கொடுமையுடையவனுமாகிய சூரனை அவனுடைய கரிய உடல் இரத்தத்தைக் கக்கும்படி கூர்மையான கட்டாரியாகிய வேலைக் கொண்டு குத்தி ஒரு கண நேரத்தில் கொன்றவனே!

ஒர-நினைக்க. உன்ன-கூர்ந்து சிந்திக்க. சேர-தியானிக்க. நிட்டுரம்-கொடுமை. நிட்டுரன் என்றது சந்தம் நோக்கி நீண்டது. சோரி-இரத்தம். கூர-கூர்மையான கட்டாரியிட்டுச் சூரனைக் கொன்றவனே.)

159