பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குறிஞ்சிக் கிழவன்

1

ந்தர் அலங்காரத்தில் முருகனுடைய திருவிளையாடல்கள் வரும். தத்துவ நூற் கருத்துக்கள் வரும். தோத்திரமும் இருக்கும். எல்லாவற்றையும் நயமாக அலங்காரமாகச் சொல்வார் அருணகிரிநாதர். காப்பிய நயங்களைப் பல இடங்களில் பார்க்கலாம். "இது முறையா?" என்று கேட்பது போலச் சில இடங்களில் இருக்கும். அது விடையை எண்ணிக் கேட்பது அன்று. அப்படிக் கேட்பதே ஒரு வித்தகம். அத்தகைய பாட்டு ஒன்றை இப்போது கவனிக்கலாம்.

சொல்லும் முறை

ருணகிரியார் கந்தர் அலங்காரத்தின் முதற்பாட்டில் விநாயகரைச் சொன்னார். பின்பு முருகனுடைய பெருமையினால் தாம் அடைந்த பேற்றைச் சொன்னார். அவன் தன்னுடைய வேலினால் கிரெளஞ்ச சங்காரம் செய்த கதையையும், சூரபன்மனை வதம் செய்த கதையையும் பிறகு சொன்னார். இது புராணமாக இருந்தால் கந்தப் பெருமானின் அவதாரம், அவனுடைய திருவிளையாடல்கள் என்று வரிசையாக வரும். தோத்திர நூல்; அன்பினால் முருகனை நினைந்து வியந்து பாடும் நூல்; ஆதலால் அடைவாக நிகழ்ச்சிகளைச் சொல்லாமல் முன்பின்னாக மாற்றிச்சொல்வார்.

கிழவன்

ருணகிரிநாதருக்கு முன்பே பல பெரியார்கள் முருகனது பெருமையைப் பாடியிருக்கிறார்கள். அவ்வாறு பாடிய பெரும் புலவர்களில் நக்கீரர் ஒருவர். அவர் பாடியது திருமுருகாற்றுப் படை. அந்த நூலின் முடிவிலே,