பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/17

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 1

பற்றிய தொடர்புள்ள நூல்களையே இந்த நாட்டுப் பெரியோர்கள், 'நல்ல நூல்கள்' என்று போற்றினார்கள். அருணகிரியார் அருளிய நூல்கள் மிகவும் நல்ல நூல்கள்.


அநுபவப் புதையல்

ருணகிரிநாதர் இயற்றிய திருப்புகழ் முதலிய நூல்களைப் படிக்கும்போது, அவற்றினிடையே காணக் கிடைக்கும் தமிழ் இலக்கிய நயங்களை மட்டும் தெரிந்து கொண்டால் போதாது, அவற்றினிடையே வரும் சாஸ்திர உண்மைகளைத் தெரிந்து கொண்டாலும் போதாது. இலக்கிய நயத்தை மாத்திரம் உணர்ந்து கொள்ள இலக்கிய நூல்களைப் பார்க்கலாம். சாஸ்திர உண்மைகளை அறிந்து கொள்ளச் சாஸ்திர நூல்களைப் பார்க்கலாம். அருணகிரிநாதர் இயற்றிய நூல்களிலோ அநுபவம் புதைந்து கிடக்கின்றது. அவர் தம் வாழ்க்கையில் என்ன என்ன துன்பத்தை அடைந்தாரோ அந்த அந்தத் துன்பத்தின் நிழலையும், அவர் என்ன என்ன இன்பத்தை அடைந்தாரோ அந்த இன்பத்தின் ஒளியையும் ஒரு சேரப் பார்க்கலாம். நிழலும் ஒளியும் கலந்திருப்பதனால்தான் அவர் பாடல்கள் நமக்கு இனிக்கின்றன.

தாம் அடைந்த துன்பத்தை அவர் சொல்லும்போது அதைப் படிக்கிற நமக்கு அருணிகிரிநாதர் நம்மை ஒத்தவர் போலும் என்ற நினைப்பு வரும்; அந்த நிலையில் அவர் நமக்கு அண்மையில் இருப்பவராகத் தோன்றுகிறார். ஆனால் ஒளி மயமான இன்பங்களை அவர் கூறும்போது அவை நமக்கு விளங்குவதில்லை. 'நம்மைப்போல இருந்த ஒருவர், ஒளி மயமான திருவருளைப் பெற்று இன்பம் அடைந்தார்; நாமும் அந்த நிலையை முயன்றால் அடையலாம்' என்ற நம்பிக்கை மாத்திரம் உண்டாகிறது; திருவருளின் நினைப்பும் வருகிறது.

நம்மைப் போலவே இந்த உலகியல் வாழ்க்கையில் துன்பமுற்று, இன்னலுற்று அலைந்த தன்மையை அருணகிரி நாதர் தம் பாடல்களில் சொல்லும்போது நம்மை எண்ணித்தான் அவர் அவ்வாறு பாடியிருக்கின்றாரோ என்று தோன்றும். உண்மையும் அதுதான். அந்த நூல்களில் அவர் கூறியிருக்கிற பாவங்கள், குற்றங்கள் எல்லாவற்றையும் வரிசையாக எடுத்துச் சொன்னால் ஒரு மனிதன் ஒரு வாழ்க்கையில் அத்தனையையும் செய்யக்கூடு