பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குறிஞ்சிக் கிழவன்

தொட்டில் என்ற பழமொழியில் தொட்டில் என்றது குழந்தைப் பருவத்தைக் குறிக்கிறது. பச்சிளம் பாலகன்தான் தொட்டிலில் படுத்து விளையாடுவான். "அழுத பிள்ளை பால் குடிக்கும்" என்ற பழமொழி சொல்கிறோம். பிள்ளைகள் எல்லாம் தாயாரிடம் பால் குடிக்கும். தாய் பால் கொடுக்க மறந்துவிட்டாலும், அழுது, தாயைக் கூப்பிட்டுப் பால் கொடுக்கச் செய்கிறது குழந்தை.

தொட்டிலில் படுத்துத் தூங்குவது குழந்தையின் லட்சணம். பால் குடிப்பது குழந்தையின் இயல்பு. அப்படியே அழுவதும் குழந்தையின் லட்சணம். ஒரு வீட்டில் குழந்தை பிறந்திருக்கிறது என்றால் பழைய காலத்துத் தாய்மார்கள் அந்த வீட்டுக்குப் போய் விசாரிப்பார்கள். இப்பொழுது இருக்கிற நாகரிகப் பெண்களுக்கு தாய்மார்கள் வந்து விசாரிப்பதைக் கேட்டால் இவர்களுக்குக் கோபம் வரும். அவர்கள் குழந்தை பிறந்த வீட்டுக்குப் போய், "குழந்தை அழுது கொண்டிருக்கிறதா?" என்று விசாரிப்பார்கள. 'குழந்தை அழுகிறதா' என்று கேட்கிறார்களே; அமங்கலமான கேள்வி அல்லவா? அப்படிக் கேட்கலாமா? என்று அதன் கருத்தைப் புரிந்துகொள்ளாமல் அவர்கள் கோபித்துக் கொள்ளக் கூடும். வயசான நாம் அழுவது துக்கத்துக்கு அறிகுறி. ஆனால் குழந்தை அழுவது சுகத்திற்கு அறிகுறி. அது அழுதால் சுவாசப் பைகள் நன்றாக இயங்கும். உடம்பு வேலை செய்ய வேண்டுமானால் சுவாசப்பை நன்றாக வேலை செய்ய வேண்டும். குழந்தை அழுதால் சுவாசப்பை விரிந்து சுருங்கி வேலை செய்ய ஆரம்பிக்கிறது. அந்த அழுகை ஆரோக்கியத்தைக் காட்டுகிறது.

குழந்தை என்பதற்குரிய முக்கிய இலக்கணங்கள் மூன்று; தொட்டில் விளையாட்டு, பால் குடித்தல், அழுகை, உலகத்திலுள்ள எல்லாப் பச்சிளம் குழந்தைகளுக்கும் இவை இயல்பு.

முருகப்பெருமான் எப்போதும் குழந்தை உருவத்தில் இருப்பவன் அல்லவா? உருவத்தில் மட்டும் குழந்தை அல்ல. செயலிலும் குழந்தை என்பதற்குரிய இந்த மூன்று இலக்கணங்களும் அவனிடம் இருக்கின்றன. "குருத்தைப் போலுள்ள அந்தப் பச்சிளம் குழந்தையை கிழவன் என்று உலகத்தார் சொல்கிறார்களே; சொல்லலாமா?" என்று அருணகிரிநாதர் இந்தப் பாட்டிலே சமத்காரமாகச் சொல்கிறார். பாட்டைக் கவனிக்கலாம்.

365