பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/174

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 1

2

முருகக் குழந்தையின் செயல்கள்

திருந்தப் புவனங்கள் ஈன்றபொற் பாவை
திருமுலைப் பால் அருந்தி

மாதேவியாரின் தனங்களிலேயே ஊறின பாலை அருந்தியவன் முருகன். அவன் பால் குடிக்கும் குழந்தையாக இருப்பவன்.

சரவணப் பூந்தொட்டில் ஏறி.

அவன் சரவணப் பொய்கையில் மலர்ந்திருக்கிற தாமரையாகிய தொட்டிலில் படுத்து விளையாடினான்; தூங்கினான். ஆகவே அவன் தொட்டிலில் படுக்கும் குழந்தையாக உள்ளவன்.

அறுவர் கொங்கை விரும்பி.... அழும்,

தனக்குப் பால் கொடுப்பதற்காக, கார்த்திகை மாதர்களாகிய ஆறு பேரும் இன்னமும் வரவில்லையே, அவர்களுடைய பாலை உண்ணவேண்டுமே என விரும்பினான்; அழுதான்.

கடலழக் குன்றழச் சூரழ விம்மிஅழும்
குருந்தை

முருகக் குழந்தை அழுகிறது; மற்றக் குழந்தையைப் போலவா அழுகிறது? நம் வீட்டில் பிறந்த குழந்தை அழுதால் அதன் குரல் அடுத்த வீட்டுக்குக்கூடக் கேட்பதில்லை. உடல் வலிமை அல்லாத தாய்க்குப் பிறப்பதனால் அதன் தொண்டை பலமற்று இருக்கும்; நெஞ்சு இறுகி இருக்கும். ஆனால் முருகனென்னும் குழந்தை வலிமையற்ற குழந்தையா? உயர்ந்த இமய மலையில் அழகான சரவணப் பொய்கையில், தாமரை மலராகிய தொட்டிலின் மீது படுத்து அழும்போது, அந்த அழுகை ஒலி மலைகளில் முட்டி மோதி ஒ, ஓ, ஒ என்று எதிரொலிக்கிறது. கடல் அலைகளின் மீது முட்டி மேர்தி எதிரொலிக்கிறது. சூரன் என்னும் அசுரனுடைய காதில் இந்தக் குழந்தையின் அழுகை ஒலி பட்ட மாத்திரத்தில், அவன் தன்னைக் கொல்ல யமன் வந்து விட்டானோ என்று 'ஒ, ஓ, ஒ' என்று அலற ஆரம்பித்து விடுகிறான்.

166