பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/176

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 1

புராணத்தில் உற்பத்தி காண்டத்தில் உள்ளது. நான்காவது திருவிளையாடல், கந்த புராணத்தின் யுத்த காண்டத்தில் இருப்பது.

புவனங்கள் ஈன்ற பாவை

ந்தர் அலங்காரத்தில் நாம் முருகனைப் பார்ப்பதோடு நிற்பதில்லை. அவனுடைய சுற்றத்தார்கள் எல்லோரையும் பார்க்கிறோம். முதல் பாட்டிலே விநாயகரைக் கண்டோம்; பின்பு, “ஆற்றைப் பணியை இதழியைத் தும்பையை அம்புலியின் கீற்றைப் புனைந்த" பெருமானாகிய அவனுடைய தகப்பனைக் கண்டோம். அன்னை வரவில்லை. இப்பொழுது வருகிறாள்; முருகன் பால் குடிக்கும் கதையைச் சொல்லும்போது வருகிறாள்.

திருந்தப் புவனங்கள் ஈன்றபொற் பாவை

பாவை என்பது பதுமை. பெண்களைப் பதுமைபோல இருக்கிறார்கள் என்று சொல்வது மரபு. அழகும் மெருகும் குறையா வண்ணம் பதுமை இருப்பது போல, அழகிய பெண்கள் இருப்பதால் அப்படிச் சொல்கிறார்கள். எம் பெருமாட்டி எப்போதும் எழில் பொருந்திய முகத்தோடு வாட்டம் இன்றி மெருகு குறையாமல் செக்கச் செவேல் என்று பொன்னிறம் பெற்றவளாக இருக்கிறாள். அதனால் அவளைப் பொற்பாவை என்கிறார். பொற்பாவை - பொன்னாலான பதுமை.

பராசக்தியை நாம் உமாதேவி என்கிறோம்; பார்வதி தேவி என்கிறோம். ஆனால் சக்தி உபாசகர்கள், ராஜராஜேசுவரி, மகா திரிபுரசுந்தரி என்று சொல்லுவார்கள். மகாதிரிபுர சுந்தரி செம்பொன் மேனி உடையவள்; பொற்பாவை போல இருக்கிறவள்; சிவந்த மேனி உடையவள். அவள் மாத்திரமா சிவப்பு? பரமேசுவரனும் சிவந்த மேனி உடையவன். எல்லோருமே செம்மையாக இருப்பவர்கள். செம்மையான குடும்பம் அது. பரமேசுவரனை, "சிவனெனும் பெயர் தனக்கே உடைய செம்மேனி அம்மான்" என்று அப்பர் பாடுகிறார். மகா திரிபுரசுந்தரியாகிய பராசக்தியை,

"உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம் உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம் மாதுளம் போது மலர்க்கமலை
துதிக்கின்ற மின்கொடி மென்கடிக் குங்கும தோயமென்ன
விதிக்கின்ற மேனி அபிராமி என்றன் விழுத்துணையே"
168