பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/180

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 1

திருந்தி உய்ய வேண்டுமென்பதற்காகவே உண்டாக்குகிறாள். ஆனால் உயிர்கள் திருந்தாமல், நல்ல வழியில் போகாமல், மாயையில் சிக்கிவிடுவதனால் இன்ப துன்பங்களைப் பெற்று வருந்துகின்றன; அது அவள் குற்றம் அன்று. அவள் உயிர்கள் திருந்தப் புவனங்களை ஈன்றாள்.

திருந்தப் புவனங்கள் ஈன்றபொற் பாவை
திருமுலைப்பால் அருந்தி.

அந்தப் பெருமாட்டியின் தனங்களிலே சுரந்த பாலை அருந்தினான் முருகன். இங்கே கதையைச் சிறிது தெரிந்து கொள்ள வேண்டும்.

அவதாரக் கதை

ண்டவன் தட்சிணாமூர்த்தியாகக் கல்லால மரத்தின் அடியிலே மோனத்தவம் பண்ணிக் கொண்டிருந்தான். அப்போது தேவர்கள் சூரபன்மன் செய்கின்ற கொடுமைகளுக்கு அஞ்சி, பிழைக்கும் வழி தெரியாமல், "அவனைச் சங்காரம் பண்ண வேண்டுமே; என்ன செய்வது?" என்று கலங்கினார்கள். மோனத்தில் இருந்த சிவபிரானைத் தவம் கலையச் செய்வது எப்படி என்று தெரியாமல் அஞ்சினார்கள். பின்பு அவனைத் தவத்திலிருந்து கலைந்து எழச் செய்ய மன்மதனை ஏவினார்கள். மன்மதன் தன்னுடைய மலர் அம்புகளை இறைவன்மேல் தொடுத்தான். பரமசிவன் தன் நெற்றிக் கண்ணை மெல்லத் திறந்து பார்த்து, அந்தப் பார்வையினால் காமனைச் சங்காரம் பண்ணிவிட்டான். பின்பு இரதி மகாதேவனை வேண்டிக் கொள்ள, "நீ இழந்த உன் கணவன், திரும்ப உன் கண்ணுக்கு மாத்திரம் தெரியும்படி உயிர் பெற்று எழுவான்" எனச் சொல்லி, காமனை உயிர்பெற்று எழச் செய்தான். ஆண்டவனை மணக்க வேண்டுமென்பதற்காக உமாதேவி இமவானுக்கு மகளாகப் பிறந்து, இமயமலைச் சாரலில் தவம் செய்து கொண்டிருந்தாள். அவள் தவத்தின் பெருமையை உணர்ந்து, இறைவன் இமயமலை சென்று அவளைத் திருமணம் செய்து கொண்டான். பார்வதி தேவியோடு இறைவன் இருக்கும் போது தேவர்கள் எல்லோரும் சென்று, தங்களுக்கு மிகவும் துன்பம் இழைத்து வரும் சூரபன்பன் முதலிய அசுரர்களைச் சங்காரம் செய்வதற்கு ஒரு குமாரனைத் தர வேண்டும் என்று வேண்டிக் கொண்டார்கள். உடனே ஆண்டவன் தன்னுடைய

172