பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குறிஞ்சிக் கிழவன்

ஐந்து முகத்தோடு கீழ்நோக்கி உள்ள அதோ முகத்தையும் சேர்த்து ஆறு முகங்களிலும் உள்ள நெற்றிக் கண்களைத் திறந்து பார்த்தான். அக்கண்களிலிருந்து ஆறு கனல் பொறிகள் எழுந்தன.

உலகத்தை எல்லாம் தாக்கி அழிக்கும் வண்ணம் எழுந்த ஆறு பொறிகளையும் பார்த்துத் தேவர்கள் அஞ்சி நடுநடுங்கிப் போய், "எம்பெருமானே, நாங்கள் கேட்ட வரம் என்ன? தாங்கள் என்ன செய்தீர்கள்? இந்த ஆறு பொறிகளும் உலகத்தை அழித்து விடும்போல் இருக்கின்றனவே!" என்று விண்ணப்பிக்க, இறைவன் அந்த ஆறு பொறிகளையும் தன் பக்கத்தில் வரச் செய்து, வாயுவையும், அக்கினியையும் அழைத்து, "நீங்கள் இருவரும் இந்த ஆறு பொறிகளையும் ஏந்திப் போய்க் கங்கையில் விடுங்கள். கங்கை இந்தப் பொறிகளைச் சரவணப் பொய்கையில் கொண்டுபோய் விடுவாள். உங்கள் துன்பத்தை எல்லாம் நீக்குவதற்கு ஒரு குமாரன் வருவான்" என்று திருவாய் மலர்ந்தான். அந்தக் கட்டளையை ஏற்று வாயுவும், அக்கினியும் ஆறு பொறிகளையும் கொண்டு போய்க் கங்கையில் விட்டார்கள். கங்கை அவற்றை இமயமலைச் சாரலில் இருந்த சரவணப் பொய்கையில் கொண்டு போய்ச் சேர்த்தாள். அங்கே ஒரே தர்ப்பைக் காடாக இருந்தது. அதன் நடுவில் இருந்த அழகான சரவணப் பொய்கையில் தாமரை மலர்கள் மலர்ந்திருந்தன. சரவணம் என்பதற்கு தர்ப்பை சூழ்ந்த இடம் என்பது பொருள். ஆறு பொறிகளும் ஆறு குழந்தைகளாக உருப்பெற்று விளையாடின. அப்போது அந்த ஆறு குழந்தைகளையும் எடுத்து, பால் ஊட்டி வளர்த்தார்கள் கார்த்திகைப் பெண்களாகிய ஆறு ரிஷி பத்தினிகள். அந்தச் சமயத்தில் பரமேசுவரன் பார்வதி தேவியிடம், "உன் குழந்தை சரவணப் பொய்கையில் இருக்கிறான். அவனைப் போய்ப் பார்க்கலாம்” என்று சொன்னான். பார்வதி தேவி அன்பு பொங்கச் சரவணப் பொய்கையை அடைந்து, குழந்தைகளை வாரி எடுத்தாள். அவள் அணைத்த மாத்திரத்தில் ஆறு குழந்தைகளும் ஒரே குழந்தையாயின. ஆறு முகமும், பன்னிரு திருக்கரங்களும் உடைய திருக்கோலத்தில் ஒரு குழந்தையாக, கந்தப் பெருமான் விளங்கினான். அவனுக்குத் தன் தனங்களிலே சுரந்த பாலை ஒரு பொற் கிண்ணத்தில் கறந்து எம் பெருமாட்டி ஊட்டினாள். இது முருகப் பெருமானது அவதாரக் கதை.

173