பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 1

ஆதலால், உலகுக்கு ஏற்ப ஐம்பூதங்களின் முத்திரையைப் போட்டுக் கொண்டு அவதாரம் செய்தான். அதனால் அவனுக்கு அழுக்கு ஏற்படாதா என்பது ஒரு கேள்வி.

நம் வீட்டுக் குழந்தை பந்து விளையாடிக் கொண்டிருக்கிறது. அது அடித்த பந்து விறகு அடுக்கியிருக்கும் அறைக்குள் விழுந்து விட்டது. பந்து எடுக்க அறைக்குள் குழந்தை ஒடியது. குழந்தையின் தாய் நீராடிவிட்டு, நெற்றிக்குத் திலகம் இட்டு, பட்டுப் புடைவை உடுத்துக் கொண்டு, ஆலயத்துக்குப் போக ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறாள். அந்தச் சமயம் குழந்தை வீரிட்டு அழுதான். தாய் பதறிப் போய் விறகு அறைக்கு ஒடினாள். கரி மூட்டையின் மேல் விழுந்த பந்தை எடுக்கக் குழந்தை மூட்டையின்மேல் ஏறியிருக்கிறான். மூட்டை சரிந்து அவன்மேல் விழுந்து விட்டது. கரி மூட்டைக்கு அடியில் அகப்பட்டு அழுகின்ற குழந்தையைத் தாய் அலறிப் போய் எடுக்கிறாள். நீராடியாகி விட்டதே: கரி மூட்டையைத் தூக்கினால் கரி நம் உடம்பெல்லாம் படுமே என்று அவள் அப்போது நினைப்பாளா? நாம் பட்டுப் புடவை உடுத்துக் கொண்டிருக்கிறோமே! கரி மூட்டையைத் தூக்கினால் நம் புடைவை கரியாகிவிடுமே என்று நினைப்பாளா? தன் உடம்பு கரி ஆனாலும், தன் சேலை அழுக்கானாலும், கரி மூட்டையை அப்பாலே தள்ளிவிட்டு, தன் குழந்தையை வாரி எடுத்து அணைத்துக் கொள்வாள். அப்படியே பஞ்ச பூதங்களினாலான பிரபஞ்சத்திற்குள் அகப்பட்டுத் தவிக்கின்ற தன் குழந்தைகளாகிய உயிர்களைக் காப்பாற்ற ஐந்து பூதங்களின் சம்பந்தம் பெற்று உலகத்திலே அவதாரம் செய்கிறான் ஆண்டவன்.

இறைவியின் அருள்

ந்து பூதங்களின் சம்பந்தம் உண்டாகிவிட்டது; போதுமா? பராசக்தியிலிருந்து சிவபெருமான் தனித்து நின்றபோது அவன் கண்களிலிருந்து முருகன் வெளிப்பட்டதனால் முருகனுக்கு பூரணத்துவம் ஏற்படவில்லை. இறைவியின் அருள் சேராவிட்டால் ஒன்றும் நடவாது. உலகத்தில் காதலர் இருவர் கருத்தொருமித்து இருப்பதுவே இன்பம். பரமேசுவரனே படைத்தாலும் அது வெறும் ஞானமயமாகத்தான் இருக்கும். அது செயல் புரிய வேண்டுமென்றால், பராசக்தியின் அருள் வேண்டும்.

176