பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குறிஞ்சிக் கிழவன்

வெறும் பொன்னாக இருப்பதனால் பயன் இல்லை. அது பயன்பட வேண்டுமென்றால் ஆபரணமாக வேண்டும் அல்லது நாணயமாக அடிக்க வேண்டும். வெறும் ஈயத்தைப் பாத்திரத்தில் பூச முடியாது. ஈயம் பூச வேண்டுமென்றால் சிறிது நவாசாரம் சேர்க்க வேண்டும். அதைப் போலப் பரமேசுவரனுடைய கண்களினின்று வெளிப்பட்ட ஆறு பொறிகளிலிருந்து உண்டான குழந்தைகளால் உலகத்திற்குப் பயன் ஏற்பட வேண்டுமென்றால் எம்பெருமாட்டியின் அருள் தொடர்பு வேண்டும். அன்னை வரவில்லையே என்று முருகப் பெருமான் சரவணப் பொய்கையில் காத்துக் கொண்டிருந்தான். ஆறு குழந்தையாக இருந்து விளையாடினான். பிரிந்த பொருள் எதுவும் உலகத்தைக் காக்காது. ஒன்றுபடுவது, கூடுவது, இன்பத்தைத் தரும். எந்த இன்பமானாலும் பிரிந்திருந்தால் இன்பம் இல்லை. முருகன் ஆறு குழந்தையாகப் பிரிந்திருக்கிற வரைக்கும் உலகத்துக்குப் பயன்படவில்லை. எம்பெருமாட்டி வந்து அணைத்தபோதுதான் ஆறுமுகமும், பன்னிரு திருக்கரங்களும் உடைய ஒரு குழந்தை ஆனான். அப்பொழுது உலகத்திற்குப் பயன்படுகிற நிலை வந்தது. எம்பெருமாட்டி ஷண்முகநாதனுக்குப் பால் கொடுத்தாள். திருந்தப் புவனங்கள் ஈன்ற பொற் பாவை திருமுலைப் பால் அருந்தினான் கந்தன். எம்பெருமாட்டியின் தனங்களிலே வாய் வைத்துப் பால் அருந்தவில்லை. ஞானசம்பந்தப் பெருமானுக்கு உமாதேவி தன் திருமுலைப் பாலைப் பொற் கிண்ணத்தில் கறந்து அதில் சிவஞானத்தைக் குழைத்து அருந்தினாள். எம்பெருமாட்டி உலகிலுள்ள மற்ற தாய்மார்களைப் போலக் கருவிருந்து குழந்தையைப் பெறுபவள் அல்ல. தன்னுடைய கருணாகடாட்சத்தால் உலக முழுவதையும் ஈன்றும், அவள் இன்னும் கன்னியாகவே இருக்கிறாள். இது உலக இயலுக்கு விரோதமாகத் தோன்றும். எம்பெருமாட்டியின் தனம் குழந்தை வாய் வைத்துப் பால் குடிப்பதற்கோ, போகத்திற்கோ உரியது அன்று.

"ஆதி நாயகன் கருணையாய் அமலமாய்ப் பரம
போத நீரதாய் இருந்ததன் கொங்கையிற் பொழிபால்
ஏதி லாததோர் குருமணி வள்ளமீ தேற்றுக்
காதல் மாமகற் கன்பினால் அருத்தினள் கவுரி"

என்று கந்த புராணத்தில் கச்சியப்ப சிவாசாரியார் சொல்கிறார்.

177