பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குறிஞ்சிக் கிழவன்

"வளஞ்செரி இணைய பாலால்
வான்சர வணமாப் பொய்கைத்
தளஞ்செறி பதுமம் ஒன்றில்
சராசரம் யாவும் காப்பான்
உளஞ்செறி கருணை எய்தி
ஒப்பிலாக் குமர மூர்த்தி
இளஞ்சிறு மதலை போல
இனிதுவீற் றிருந்தான் மன்னோ"

என்பது கந்த புராணம்.

"சரவணப் பூந்தொட்டில் ஏறி" என்று அருணகிரிநாதர் சொல்வது புதிதன்று. இந்தக் கருத்துப் பழங்காலம் முதற் கொண்டே வழங்கி வருகிறது என்பதைப் பழம் பாடல்களால் உணரலாம். இளங்கோவடிகள் சைனர். அவர் இயற்றிய சிலப்பதிகாரத்தில் இந்தச் செய்தியைச் சொல்கிறார். சேர நாட்டு மலைவாழ் மக்கள் முருகனுக்குப் பூசை போடுகிறார்களாம். குரவைக் கூத்து ஆடுகிறார்கள். அப்போது குரவைக்குரிய பாடலைப் பாடுகிறார்கள். குன்றக் குரவை என்ற பகுதியில் அந்தப் பாடல் இருக்கிறது.

“சரவணப்பூம் பள்ளியறைத் தாய்மார் அறுவர்
திருமுலைப்பால் உண்டான்"

என்பது பாட்டின் ஒரு பகுதி. சரவணப் பொய்கையில் பூம்பள்ளியில் முருகன் அறுவர் பாலை உண்டு தங்கினானென்று கூறுகிறது இது.

"பயந்தோர் என்ப பதுமத்துப் பாயல்"

என்று சங்ககாலத்துப் பரிபாடலில் முருகன் புகழ் வருகிறது. பதுமத்துப் பாயல் - தாமரைப் பூவாகிய படுக்கை. அருணகிரி நாதர் தொட்டில் என்கிறார். அந்தப் புலவர் பாயல் என்றார். பழங்காலம் முதற்கொண்டே இத்தகைய புராண வரலாறுகள் வழங்கி வந்திருக்கின்றன என்பதற்கு இவை அடையாளம். அருணகிரிநாதர் எதையும் கற்பனையாகச் சொன்னதாகக் கருத வேண்டாம். அவர் காலத்திற்கு முன்பே தொன்றுதொட்டு இந்த நாட்டில் முருகனைப் பற்றி வழங்கி வந்த செய்திகளையே அவர் அலங்காரமாகச் சொல்கிறார்.

சரவணப் பூந்தொட்டிலேறி அறுவர் கொங்கை விரும்பி முருகன் அழுதான். பசி எடுத்தவனைப் போல அழுதான். நமக்கு

179