பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 1

இறுமாந்து போய்ப் பற்பல தீமைகளைப் புரிந்து கொடுமை ஆட்சி நடத்தி வந்தோமே; இனி நம்முடைய சுதந்திரம் பறி போய் விடுமே' என்று சூரன் அழ ஆரம்பித்தான். உலகின் உச்சியாகிய இமாசலத்திலுள்ள சரவணப் பொய்கையில் படுத்து முருகன் அழ, அந்த அழுகையின் எதிரொலி போல முதலில் கடலிலிருந்து அழுகை ஒலி கிளம்பியது; பின்பு குன்றிலிருந்து அழுகை ஒலி கிளம்பியது; அப்பால் சூரனிடத்திலிருந்தும் அழுகை ஒலி கிளம்பியது. இப்படி அழகுபட அருணகிரியார் சொல்கிறார்.

கடலழக் குன்றழச் சூரழ விம்மிஅழும்
குருந்தைக் குறிஞ்சிக் கிழவன்என் றோதும் குவலயமே

'கடல் அழுதது; குன்று அழுதது சூரன் அழுதான்' என்று சூரன் அழுததைக் கடைசியாக வைக்கிறார். அவன் அழுதால் மற்றவர்கள் அழுகை நின்று போய்விடும். அவனை அழப்பண்ணினால் தான் தேவர்கள் சிரிப்பார்கள். அவன் அழிந்தால்தான் தேவேந்திரலோகம் பிழைக்கும். குழந்தை அவதாரம் செய்தவுடனே சூரனை அழச் செய்துவிட்டான். கடல் சூரனுடைய சார்பினாலே கெட்டது; இயல்பில் தீங்குடையது அன்று. ஆதலின் முருகன் அழுகையை அது முதலில் உணர்ந்து அழுதது. ஒலியை எளிதில் வாங்கிச் செல்வது நீர் என்று விஞ்ஞானிகள் சொல்வார்கள். அதற்கும் பொருத்தமாக இருக்கிறது இது.

அந்தக் குழந்தை ஒருமுறை அழுததோடு நிற்கவில்லை. அது விம்மி அழுதது; விட்டுவிட்டு அழுததாம். அதன் அழுகை ஒலி கேட்கும்போதெல்லாம் கடல் அழுதது, குன்று அழுதது, சூரன் அழுதான்.

விம்மி அழும் குருந்தை

என்கிறார் அருணகிரியார். குருந்து என்பதற்குக் குருத்து என்று பொருள். அவன் பச்சிளங் குழந்தை என்பதைக் குருந்து என்ற சொல்லினால் விளக்குகிறார். "இந்தப் பச்சிளம் பாலகனை, பால் குடிக்கும் குழந்தையை, தொட்டிலில் படுத்து விளையாடும் குழந்தையை, கிழவன் என்று சொல்கிறார்களே; இப்படிச் சொல்லலாமா? இது என்ன பைத்தியக்காரத்தனம்!" என்று சொல்கிறார்.

184