பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/198

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 1

நமக்கு ஒரு பெண் இருக்கிறாள். அவளுக்குக் கல்யாணம் பண்ண வேண்டுமென்று முயலுகிறோம். ஒரு பையனைப் பார்த்தால், அவனுடைய தன்மை எல்லாவற்றையும் தெரிந்து கொள்கிறோம். அவன் எவ்வளவு படித்திருக்கிறான் என்று விசாரிக்கிறோம். என்ன என்ன உத்தியோகம் பார்த்தான், இப்பொழுது என்ன உத்தியோகம் செய்து கொண்டிருக்கிறான் என்று தெரிந்து கொள்கிறோம். அவனுடைய தந்தை, தாய், உறவினர்கள் எந்த எந்த ஊர்களில் இருக்கிறார்கள், அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பனவற்றையும் தெரிந்து கொள்கிறோம். காரணம், நம்முடைய அன்புக்குரிய பொருளைச் சுற்றிச் சூழ இருக்கும் அத்தனை செய்திகளையும் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற மனித இயல்புதான். தனக்குப் பிரியமான பொருளைப் பற்றியுள்ள எல்லாச் செய்திகளையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஊக்கம் மனிதனுக்கு இயல்பாக உண்டு.

நமக்கு இன்பத்தைத் தரவல்லவன் ஆண்டவன். அவன் உலகத்தில் திரு அவதாரம் செய்தான். அவன் எப்படி எழுந்தருளினான், அவன் என்ன என்ன விளையாடல் செய்தான், அவன் என்ன என்ன தத்துவங்களை உயிர்களுக்கு போதித்தான் என்பன போன்றவற்றை அறிந்து கொள்ள வேண்டுமென்ற துடிப்பு அவனிடம் அன்புள்ளவர்களுக்கு ஏற்படும். அவனைப் பற்றி யார் யாருக்கு என்ன என்ன தெரியுமோ அவை யாவையும் அவர்கள் வாயிலாகக் கேட்க வேண்டுமென்ற ஆசை தோன்றும். அருணகிரிநாதரும் தம் காலத்துக்கு முன்பிருந்தே இந்த நாட்டில் முருகனைப் பற்றி வழங்கி வந்த செய்திகளை எல்லாம் அறிந்திருந்தார்.

2

முன்பாட்டில், "எப்போதும் குழந்தை உருவத்தோடு இருக்கும் முருகனை இந்த உலகம் கிழவன் என்று சொல்கிறதே; என்ன பேதைமை!" என அலங்காரமாகக் கூறியதைப் பார்த்தோம். அலங்காரம் என்றால் அழகுபடச் சொல்வது அல்லவா?. முருகனைக் குழந்தை என்று சொல்லிவிடலாம். அது சிறப்பு அல்ல. அதை அலங்காரமாகச் சொல்ல வேண்டும். சென்ற பாட்டில் அப்படிச் சொல்லி, திரு அவதாரதத்துவத்தையும், இளம்பருவத் திருவிளையாடல்களையும் சொன்னார். குழந்தைப் பருவத்துக்கு அடுத்த

190