பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 1

சூரபன்மன் சங்காரம். சூரனுடனும், அவனுடைய தோழர்களுடனும் நெடுங்காலம் போர் நிகழ்ந்தது. அதன் வருணனை கந்த புராணத்தில் மிக விரிவாக இருக்கிறது. ஆனால் அதுவே முடிவான பகுதி அல்ல; பயன் ஆகிய பகுதியும் அல்ல. கந்த புராணம் என்ற மரத்தின் உச்சியிலே ஒரு பழம் பழுத்திருக்கிறது. அந்தப் பழந்தான் வள்ளி திருமணம்.

கச்சியப்ப சிவாசாரியார் வள்ளி திருமணத்தோடு புராணத்தை முடிக்கிறார். எந்தக் கதையை எடுத்தாலும் கல்யாணத்தோடு முடிக்க வேண்டுமென்று நினைப்பது நம் நாட்டு வழக்கம். மனிதன் வாழ்வு மரணத்திலே முடிகிறதைப் பார்க்கிறோம். எப்பொழுதும் நாற்றமுள்ள இடத்திலே குடியிருக்கும் ஒருவன் சொந்தமாக ஒரு வீடு கட்டிக் கொள்ள முயலும்போது நாற்ற முள்ள இடத்திலா கட்டிக் கொள்வான்? நல்ல காற்றுள்ள இடத்தில் கட்டிக் கொள்ள வேண்டுமென்று யோசிக்க மாட்டானா? அதைப்போல லட்சிய வாழ்வு வாழ வேண்டுமென்று விரும்புகிறவர்கள், மரணத்திலேயே முடிந்து கொண்டிருக்கிற மனித வாழ்வைச் சொல்ல மாட்டார்கள். மரணத்திற்கும் அப்பாற்பட்ட அமர வாழ்வினை அடைய வேண்டுமென்ற லட்சியத்தோடு கதை புனையும் கலைஞர்களுக்குக் கதையை நன்றாக முடிக்க வேண்டுமென்ற கருத்து இருக்கும். கந்தபுரணம் வள்ளியெம்பெருமாட்டியின் திருமணத்தோடு நன்றாக முடிகிறது.

இரண்டு மணம்

ந்தபுராணத்தில் இரண்டு திருமணங்கள் வருகின்றன. சூரனோடு முருகன் போரிட்டு, அவனைச் சங்காரம் செய்து தேவர்களுக்கு இன்ப வாழ்வை மீண்டும் வழங்கினான். முருகன் செய்த உதவியை எண்ணித் தேவராஜன் தன் மகள் தேவகுஞ்சரியை அவனுக்கு மணம் செய்து வைத்தான். "எம்பெருமானே, நீ எங்களுக்குச் செய்த நன்றியை நாங்கள் என்றும் மறக்க மாட்டோம். போரிலே நீ காட்டிய வீரத்திற்கு நாங்கள் என்ன கைம்மாறு செய்யப் போகிறோம்! பார்வதி பரமேசுவரரைக் காணுவதுபோல உன்னைத் திருமணக்கோலத்தோடு பார்க்க வேண்டுமென்று நினைக்கிறோம். இந்தப் பெண்ணை நீ ஏற்றுக் கொண்டு எங்களுக்கு அருள் செய்ய வேண்டும்" என்று கூறி,

192