பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/202

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 1

தேவேந்திரனுடைய பெண்ணை மணந்து கொண்டு அவர்களுக்கு வாழ்வு அளித்த பெருமான் நமது ஊருக்கும் வந்து மக்களில் ஒருத்தியாக வாழ்ந்து கொண்டிருந்த பேதைப் பெண் வள்ளியை மணந்து கொண்டு, நமக்கு வாழ்வு அளித்து நம் உறவினர்களில் ஒருவனாக, நம் அன்புக்குரிய நெருங்கிய சுற்றத்தினனாக ஆனான் என்றால், அந்தப் பெருமையான நிகழ்ச்சி நம் நினைவை விட்டு அகலாமல் இருப்பதற்குரியதல்லவா? முருகனை என்றென்றைக்கும் வள்ளி மணாளனாகவே எண்ணி நாம் உறவு கொண்டாடி உய்வு பெறவேண்டுமென்பதற்காகவே வள்ளியெம் பெருமாட்டியின் திருமணத்தோடு கச்சியப்ப சிவாசாரியார் புராணத்தை முடித்திருக்கிறார்.

இதற்கு முன் பாட்டிலே முருகன் குழந்தையாக இருந்து பல திருவிளையாடல்களைப் புரிந்ததைக் கண்டோம். இந்தப் பாட்டிலே முருகன் கல்யாணக் கோலத்துடன் வருகிறான்.

கந்த புராணமும் சொந்தப் புராணமும்

பெரும்பைம் புனத்தினுட் சிற்றேனல்
காக்கின்ற பேதைகொங்கை
விரும்பும் குமரனை மெய்யன்பி
னால்மெல்ல மெல்லஉள்ள
அரும்பும் தனிப்பர மானந்தம்
தித்தித் தறிந்தஅன்றே
கரும்பும் துவர்த்துச்செந் தேனும்
புளித்தறக் கைத்ததுவே.

இந்தப் பாட்டில் "பெரும்பைம் புனத்தினுட் சிற்றேனல் காக்கின்ற பேதை கொங்கை விரும்புங் குமரனை" என்பது முதல் பகுதி. இது கந்த புராணம். அடுத்து இருப்பது இரண்டாம் பகுதி. அருணகிரிநாதரது சொந்தப் புராணம். இந்தப் புராணத்தில் மூன்று அத்தியாயங்கள் இருக்கின்றன. "மெய்யன்பினால் மெல்ல மெல்ல உள்ள” என்பது முதல் அத்தியாயம். “அரும்புந் தனிப் பரமானந்தம் தித்தித்து அறிந்தவன்றே" என்பது இரண்டாவது. "கரும்பும் துவர்த்துச் செந்தேனும் புளித்தறக் கைத் ததுவே" என்பது மூன்றாவது. முதற்பகுதியிலே அருணகிரியார் கந்தபுராணக் கதையைச் சொல்லிவிட்டு, பிற்பகுதியிலே மூன்று பிரிவுகளாக அவன் அருளால் பெறும் இன்பத்தைப் புலப்படுத்துகிறார்.

194