பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 1

புனம் தேடி வருகிறான். "அம்மா உன் கை நல்ல கை. நீ முதலில் கை வைத்தால் என் சரக்கு எல்லாம் நிமிஷத்தில் போணியாகி விடும்" என்று காய் விற்பவள் சொல்வதைப் போல, அவன் வள்ளியெம்பெருமாட்டியிடம் ஒடி வந்து கெஞ்சுகிறான். தனக்குரிய லாபத்தைத் தேடி வருபவனைப்போல வருகிறான். 'பெரும் பைம்புனத்தினுட் சிற்றேனல் காக்கின்ற பேதை கொங்கை விரும்பி' வருகிறான். அவளை ஆட்கொள்வதற்காகவே அவன் வருகிறான்.

3

மெல்ல மெல்ல உள்ளுதல்

டுத்த இரண்டடிகளில் அருணகிரியார், உயிருக்கு அவன் எப்படி வாழ்வு அளிக்கிறான் என்று சொல்கிறார்.

மெய்யன்பினால் மெல்ல மெல்ல
உள்ள அரும்புந் தனிப்பர மானந்தம்
தித்தித் தறிந்தஅன்றே

'சிற்றேனல் காக்கின்ற பேதை கொங்கை விரும்புங் குமரனை' மெல்ல மெல்ல உள்ள வேண்டும்; மெதுவாக, மெதுவாக நினைக்க வேண்டும்; தியானம் செய்ய வேண்டும். கடுங்கோடைக் காலத்தில் நாக்கு வறள, நெடுந்துாரம் பிரயாணம் செய்து களைப்படைந்து வருகின்ற ஒருவனுக்கு நீர் கொடுத்தால் அவன் அதைச் சிறிதாகவே பருகுவான். மடக்கென்று வேகமாகக் குடித்தால் தொண்டை விக்கிக் கொள்ளும். நீண்ட நாள் நோயிலே அடிப்பட்டவனுக்கு நோய் தெளிந்தவுடன் உணவைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொடுங்கள் என்று டாக்டர் சொல்வார். பல பல காலமாக இறப்பு, பிறப்பு ஆகிய பிணிகளிலே வேதனைப்பட்டுக் காய்ந்து கருகிப் போய் இருக்கின்ற ஆன்மாக்களுக்கு இறைவனது அருள் தண்ணிரைப் பாய்ச்ச வேண்டுமென்றால் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் பாய்ச்ச முடியும். ஆறு நிறைய வெள்ளம் போகிறதே என்று அந்த ஆற்றுக்கு அருகில் உள்ள வயலுக்குத் தண்ணீர் பாய்ச்ச ஆற்றின் கரையையே உடைத்துவிட முடியுமா? ஆற்றிலே வெள்ளம் போனாலும் மடை வழியேதான் பாய்ச்ச வேண்டும்.

204