பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/216

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 1

இழுக்கப் போனபோது, "ஆவிக்கு மோசம் வரும்" என்று தெரிந்து கொண்டபோது, "என்னைக் காப்பாற்ற உன்னைத் தவிர வேறு யாரும் இல்லை; உன் பற்றன்றி எனக்கு வேறு ஒரு பற்றும் இல்லை" என்று அவனைப் போய்த் தழுவிக் கொண்டாள். இறைவன் அவளை ஆட்கொண்டான். அவளுக்கு எல்லையில்லா ஆனந்தத்தைக் கொடுத்தான்.

அத்தகைய ஆனந்தம் கனவில் காண்பது அல்ல; புத்தகத்தில் எழுதியிருக்கிறது மாத்திரம் அல்ல; இந்த உலகத்தில் நமக்குப் பயன்படாதது அல்ல; மனிதப் பிறவிக்கு அப்பாற்பட்டதும் அல்ல; அரும்பும் தனிப்பரமானந்தத்தை இந்தப் பிறவியிலேயே நமக்குச் சொந்தமாக்கிக் கொள்ளலாம்.

கரும்பும் தேனும்

சிற்றேனல் காக்கின்ற பேதைகொங்கை
விரும்பும் குமரனை மெய்யன்பி னால்மெல்ல மெல்லஉள்ள
அரும்பும் தனிப்பர மானந்தம் தித்தித்து அறிந்த அன்றே
கரும்பும் துவர்த்துச்செந் தேனும் புளித்துஅறக் கைத்ததுவே.

நம்மிடம் உள்ள பொறிகள் எல்லாவற்றையும்விட நாக்குத் தான் அதிக ஆதிக்கம் செலுத்துகிறது. நாக்காகிய பொறிக்கு நாம் அடிமைப்பட்டிருக்கிறோம். நல்ல இனிமையான சங்கீதத்தைக் கேட்டு அநுபவிக்கின்றோம். அதைச் சொல்லும்போது, அவர் பாடிய பாடல் தேன் மாதிரி இருக்கிறது என்று சொல்கிறோம். நமது அன்பிற்குரிய குழந்தையைப் பார்த்துக் கட்டிக் கரும்பே என்று பாராட்டுகிறோம். இப்படி, எந்தப் பொறியினால் இன்பம் அடையக் கூடிய பொருளாயினும் அதற்கு நாக்காகிற பொறியினால் இன்புறும் பொருளை உபமானமாகச் சொல்கிறோம். நம் வாழ்வில் நாக்கு எல்லாப் பொறிகளையும்விட அதிகம் ஆதிக்கம் செலுத்துகிறதுதான் அதற்குக் காரணம்.

குழந்தை பிறந்த உடனேயே பாலைச் சுவைத்துக் குடிக்கின்றது. பிறக்கும்பொழுது அது நாக்குக்கு அடிமையாகிவிடுகிறது. கடைசியில் இறக்கும்பொழுது என்ன ஆகிறது? 'காது கேட்கவில்லை; கண்மூடிப் போய்விட்டது. வாயும் கிட்டி விட்டது. பஞ்சால் பாலைத் தோய்த்துத் தோய்த்து விட்டுக் கொண்டிருக்

208