பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 1

கரும்பும் தேனும் ஐந்து பொறிகளினாலும் அடைகின்ற இன்பங்களுக்கு அடையாளமாக இருக்கின்றன. கரும்பு ஒருவனுடைய முயற்சியினாலே விளைந்து, அவனுக்கு இன்பத்தைக் கொடுக்கின்ற பொருள். தேன் ஒருவனுடைய முயற்சி இல்லாமலேயே விளைந்து அவனுக்கு இன்பத்தைத் தருகின்ற பொருள். மனிதனுடைய இன்பங்கள் இரண்டு வகை. தன்னுடைய முயற்சியினாலே பெறுகின்ற இன்பம் ஒருவகை; முயற்சி இல்லாமலேயே பண்டைத் தவத்தின் பயனாக அடையும் இன்பம் ஒரு வகை. கரும்பும் தேனும் அந்த இரண்டையும் குறிக்கின்றன. அரும்பும் தனிப்பரமானந்தத்தின் ஒரு துளியைச் சுவைத்தாலும் போதும்; பிறகு கரும்பும் துவர்த்துப் போய்விடும்; செந்தேனும் புளித்து, அறவே கைத்துப் போய்விடும். ஐந்து இந்திரியங்களினாலே அநுபவிக்கின்ற இன்பம் யாவும் நமக்குத் துவர்த்துப் போய்விடும்; புளித்துப் போய்விடும்; கைத்துப் போய்விடும் என்பது இதன் குறிப்பு.

தினைப்புனம் காத்துக் கொண்டிருந்த பேதைப் பெண்ணாகிய வள்ளியைப் போல, ஆன்மாக்கள் இந்த அகன்ற உலகமாகிற வனத்தில், சிற்றேனல் போன்ற சிற்றின்பத்தைக் காத்துக் கொண்டிருக்கின்றன. தினைப் புனத்தில் சிற்றேனல் காப்பதையே தன் தொழிலாக எண்ணியிருந்தாள் வள்ளியம்மை. ஆனால் இறைவனை அடைந்த மாத்திரத்தில் அவள் இந்த நிலைக்கு மீட்டும் வராத பேரின்ப நிலையை எய்திவிட்டாள். நாமும் அவன் அருட்பேற்றை அடைந்தால், இந்த உலகத்தில் மீட்டும் வந்து பிறவா நிலையை அடைந்து விட முடியும்.

முன்னும் பின்னும்

மய நெறியிலே சாதனம் புரிகின்றவர்களைப் பார்த்தால் பலருக்கு அவர்கள் செயல் பைத்தியக்காரத்தனம் என்று தோன்றும். ஏழு வயசுப் பெண் குழந்தை இருக்கிறாள். அவளை மணப்பதற்குரிய உரிமை பெற்ற அத்தான் அவள் வீட்டில் இருக்கிறான். அவனுக்கு வயசு பதினாறு. ஒரு நாள் அவன் தன் மாமன் மகளை அணைத்துக் கொள்கிறான். அவளோ அவன் பிடியில் இருந்து ஓடிவிடுகிறாள். அவளுக்கு அவனுடைய முகத்திலுள்ள மீசை குத்துவது அருவருப்பை அளிக்கிறது. இந்தப் பெண் பருவம்

210