பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/219

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தனிப்பரமானந்தம்

அடைந்தவுடனே, அவனே அவளை மணந்து கொள்கிறான். அவளுக்கு இன்பம் கொடுக்கிறான். அப்போது அந்தப் பெண் நினைக்கிறாள். "அடடா நமக்கு இந்த இன்பம் தெரியாமல் போய்விட்டதே! அவர் கைகளைப் பிடித்து உதறி எறிந்தோமே; அது எவ்வளவு பைத்தியக்காரத்தனம்" என்று நினைக்கிறாள்.

"கன்னிகை ஒருத்திசிற் றின்பம்வேம் பென்னினும்
கைக்கொள்வள் பக்குவத்தில்;
கணவனருள் பெறின்முனே சொன்னவாறென்னெனக்
கருதிநகை யாவள்;அதுபோல்
சொன்னபடி கேட்குமிப் பேதைக்கு நின்கருணை
தோன்றிற் சுகாரம்பமாம்"

என்று பாடுகிறார் தாயுமானவர்.

நம் உள்ளங்களில் இன்றைக்குக் கன்னியாகிய பேதைப் பெண்ணைப் போல ஆண்டவனைத் தியானிப்பதனால் இன்பம் உண்டாகவில்லை. நாம் மெய்யன்பினால் உள்ளுவதில்லை. நாம் இன்னும் பக்குவம் அடையவில்லை. பக்குவம் நமக்கு வந்து விட்டால் அவனைத் தியானம் செய்யும்போது ஆனந்தம் நமது உள்ளத்தில் அரும்பும். அதைச் சுவைத்த பிறகு, "அடடா, இந்த இன்பம் தெரியாமல் இத்தனை நாளாக இருந்தோமே உலகத்திலுள்ள பொருள்களை எல்லாம் பொறிகளின் வாயிலாகச் சுவைப்பதுதான் இன்பம் என்று எண்ணி ஏமாந்து போய்விட்டோமே! இது என்ன பைத்தியக்காரத்தனம்?" என்று தோன்றும். மற்ற இன்பங்கள் சுவையின்றிப் போய்விடும்.

உலகியலின்பங்களை விட்டுவிட நமக்கு மனம் வராது. நம்முடைய அநுபவத்தில் பொறிகளால் நுகரும் இன்பமே இன்பமாக இருக்கிறது. வேறு இன்பம் இருப்பதாகச் சொன்னாலும் அதை நம்ப முடிவதில்லை. அதனால் இந்த இன்பங்களை இறுகப் பற்றிக் கொண்டிருக்கிறோம். இந்த இன்ப நுகர்ச்சியை அடியோடு விட்ட பிறகே இறைவனுடைய இன்ப அநுபவம் சித்திக்கும் என்று சொல்வது முறை அன்று. இந்த இன்பத்தில் இருக்கும்போது மெல்ல மெல்லத் தியானிக்கத் தொடங்கினால் அருளின்பம் அரும்பத் தொடங்கும். இந்த இன்பம் புளிக்கத் தொடங்கும்.

211