பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/22

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அருணகிரியார் செய்த அலங்காரம்

பெரிதாக எண்ணித் தம் நலம் பேணி வாழும் அல்பாத்மாக்களைப் போலன்றிப் பிற உயிரையும் தம் உயிராக எண்ணி அவ்வுயிர்களுக்கு வரும் துன்பங்களையும் தம்முடையனவாக உணரும் மகாத்மாக்கள் எல்லாச் சமயத்திலும் இருக்கிறார்கள்.

அருணகிரி நாதரும் உலகத்திலுள்ள எல்லா உயிர்களும் படும் துன்பங்களைத் தாம் படும் துன்பங்களாகவே மேற்கொண்டு கூறுகின்றார். நாமும் பிறர் படுகின்ற துன்பங்களை எல்லாம் எடுத்து மேடையில் பேசிக்கொண்டே போகலாம். ஆனால் அருணகிரிநாதர் அந்தத் துன்பங்களிலிருந்து விடுபட்டுத் தாம் பெற்ற இன்பத்தையும், அந்த இன்பத்திலே மீதுார்ந்து நிற்கும் நிலையையும் பற்றிப் பேசுகின்றார். அவற்றைப் பார்க்கும்போது அருணகிரிநாதப் பெருமான் துன்ப நிலையினின்றும் மாறி, இறைவன் திருவருளால் இன்ப நிலையை அடைந்தார் என்று தெரிந்து கொள்ளுகிறோம்.

கந்தர் அநுபூதி, கந்தர் அலங்காரம் போன்ற நூல்களைப் பார்த்தால் அவற்றில் இறைவன் திருவருளைப் பற்றி, இன்பத்தைப் பற்றி, துன்பத்தைப் பற்றிப் பல செய்திகள் இருப்பதைக் காணலாம். துன்பங்களைப் பற்றிச் சொல்லும்போது நமக்குள்ள அனுபவங்களை அப்படி அப்படியே எடுத்துச் சொல்வதுபோலத் தோன்றும். திருவருட்பேற்றினால் கிடைத்த இன்பத்தைப் பற்றி அவர் சொல்லும்போதும் தம் அநுபவத்தையே சொல்கிறார். இருந்தாலும் அது நமக்கு அவ்வளவாக விளங்குவது இல்லை. துன்பங்கள் நமது அநுபவத்தோடு ஒட்டியிருப்பதனால் உண்மையென்றும், இன்ப நிலை நமக்குப் புலப்படாததனால் பொய்யென்றும் சொல்லலாமா? ஒன்று உண்மையானால் மற்றொன்றும் உண்மைதான். துன்பநிலையை நாம் அநுபவித்ததுபோல இன்ப நிலையையும் அடைய முயல வேண்டும். அதுதான் கந்தர் அலங்காரம் முதலிய நூல்களைப் படிப்பதன் பயன்.

வழிகாட்டி

றைவன் திருவடிகளை அடைந்ததனால் உண்டான இன்பத்தைப் பாட்டாகப் பாடுகிறார் அருணகிரிநாதர். அந்த இன்பத்தை நினைந்து வியப்பில் ஆழ்கிறார். உலகத்திலேயுள்ள உயிர்கள் எல்லாம் மலத்திலே அழுந்தியிருக்கின்றன. மலம் நீங்க