பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/220

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 1

நிரம்ப விலை கொடுத்து ஒருவன் கண்ணாடிப் படம் ஒன்றை வாங்கி வருகிறான். அதைக் கீழே வைக்காமல் பற்றிக் கொண்டிருக்கிறான். அவனிடமுள்ள அதை அப்போது பறிப்பதென்பது முடியாத காரியம். ஆனால் அவனுக்குத் தூக்க மருந்தைக் கொடுத்துவிட்டால், அதன் வேகம் ஏற, ஏற அவன் கையிலுள்ள பொருள் தானே நழுவி விழுந்துவிடும். அப்படி நழுவுவதற்குக் காரணம் தூக்கம். அது அவனிடம் மெல்ல மெல்லச் சென்று பற்றிக் கொண்டது.

இறைவனை மெய்யன்பினால் மெல்ல மெல்லத் தியானிப்பதனால் பரமானந்தம் என்னும் தூக்கம் படர்கிறது. அப்போது அது காறும் இனிமையாக இருந்தன யாவும் தாமே நழுவி விடுகின்றன.

வள்ளியெம்பெருமாட்டியின் வாழ்வை நமக்கு வழிகாட்டியாக வைத்து, இந்தத் தத்துவத்தை அருணகிரியார் இந்தப் பாட்டிலே சொல்கிறார்.

பெரும்பைம் புனத்தினுட் சிற்றேனல்
காக்கின்ற பேதைகொங்கை
விரும்பும் குமரனை மெய்யன்பி
னால்மெல்ல மெல்லஉள்ள
அரும்பும் தனிப்பர மானந்தம்
தித்தித் தறிந்தஅன்றே
கரும்பும் துவர்த்துச்செந் தேனும்
புளித்தறக் கைத்ததுவே;

(பெரிய பச்சையான கொல்லையில் சிறிய தினைப் பயிரைக் காக்கின்ற பேதைப் பெண்ணாகிய வள்ளியின் கொங்கையை விரும்பும் குமரக் கடவுளை, மெய்யான அன்பினால் மெல்ல மெல்லத் தியானிக்க, அதனால் அரும்பும் ஒப்பற்ற மேலான இன்பம் இனிமை தரச் சுவைத்து அறிந்த அன்றைக்கே, அதுகாறும் சுவையுடையதாக இருந்த கரும்பும் துவர்ப் புடையதாகி, செந்தேனும் புளித்து முற்றும் கசந்துவிட்டது.

புனம் - தினைக்கொல்லை. ஏனல் - தினைப்பயிர் உள்ள - நினைக்க. அற - முழுவதும்; அடியோடு. கைத்தது - கசந்தது.)

212