பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 1

"அமரும் பதிகேள் அகமாம் எனும்இப்
பிமரம் கெடமெய்ப் பொருள்பே சியவா"

என்று கந்தர் அநுபூதியிலும் இந்தப் பிரமத்தைச் சொல்கிறார். பிமரம் என்று எழுத்து மாற்றி அங்கே சொல்லியிருக்கிறார்.

மயக்கம் என்று எதைச் சொல்கிறார்? தெளிவு இல்லாமல் இருப்பதே மயக்கம். தெளிவு என்பது இன்ன பொருள் இத்தகையது என்று உணர்ந்துகொள்ளும் மனநிலை. நாம் தெளிவுடன் இருக்கிறோமா? உண்ணும் உணவைச் சரியானபடி உண்ணுகிறோம். ரூபாய் அணா பைசாவைச் சரியானபடி எண்ணுகிறோம்; நம்முடைய உறவினர்களையும் நண்பர்களையும் சரியானபடி தெரிந்து கொள்கிறோம்; காதினால் கேட்கும் வார்த்தைகளுக்குச் சரியானபடி பொருள் செய்து கொள்கிறோம். ஆகையால் தெளிவான நிலையில்தான் இருக்கிறோம் என்று நினைக்கத் தோன்றும். ஆனால் அந்த எண்ணம் உண்மை அன்று. நாம் காணுகிற அனைத்தும் உண்மை அல்ல. வெவ்வெறு வகையான பொருள்களை நாம் காண்கிறோம். விருப்பு வெறுப்புடன் பார்க்கிறோம். நான் என்ற நினைவு நீங்காமல் இருக்க, அந்த நினைவோடு பார்க்கிறோம். அந்த அந்தப் பொருளை அதன் அதன் இடத்திலேயே வைத்துப் பார்க்காமல் நம்மோடு ஒட்டிப் பார்க்கிறோம். நம் பார்வையும் கருத்தும் நம்மிடத்திலிருந்தே தொடங்குகின்றன. ஆதலால் பொருள்களின் இயல்பை உள்ளவாறே தெரிந்து கொள்ள முடியவில்லை.

பல நூல்களைப் படித்தும் நமக்கு முழுத் தெளிவு ஏற்பட்டதாகச் சொல்ல இயலாது. இறந்த பிறகு உயிர் என்ன ஆகிறது? நமக்குத் தெளிவாகத் தெரியாது. நமக்கும் இறைவனுக்கும் என்ன தொடர்பு? உடம்புக்குள் உயிர் ஏன் வந்தது? இனி எத்தனை எத்தனை உடம்புக்குள் புகப் போகிறது? ஏன் இந்த நிலை வர வேண்டும்? ஒன்றும் நமக்குத் தெளிவாகத் தெரியாது.

நம்முடைய உள்ளத்தில் என்ன என்ன எண்ணங்கள் பதுங்கியிருக்கின்றன. நம்முடன் பழகுகிறவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறார்கள்? ஒன்றும் நமக்குத் தெளிவாகத் தெரியாது.

இந்தத் தெளிவற்ற நிலையில் நாம் காண்கிற பொருள்கள் பலவாக இருக்கின்றன; மெய்யாகத் தோன்றுகின்றன. ஆனால்

214