பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பேய் விளையாட்டு

உண்மையான பொருள் இன்னதென்று தெரியாமல் திண்டாடுகிறோம். பெரியவர்கள் இறைவனை மெய்ப்பொருள் என்றும் பரம்பொருள் என்றும் சொல்கிறார்கள். அதை நாம் கேட்கிறோம்; ஆனால் அதை அநுபவத்தில் உணர முடிவதில்லை. பெரியவர்கள் சொல்கிறார்கள் என்பதற்காக மறுத்துப் பேசாமல் இருக்கிறோம்.

நமக்கு எல்லாமே பொருளாக இருக்கின்றன. சோறு ஒரு பொருள்; குழம்பு ஒரு பொருள்; அணு ஒரு பொருள்; அணு குண்டும் பொருள்தான். தகரம் ஒரு பொருள்; தங்கமும் ஒரு பொருள். காற்றும் நீரும் நெருப்பும் பொருள்களே. மனிதன், குழந்தை, யானை எல்லாம் பொருள்களே. புழு, பூனை, புலி யாவும் பொருள்களே. இத்தனை பொருள்களையும் உணர்ந்தும் நாம் மெய்ப்பொருளை உணரவில்லை. அந்த மெய்ப் பொருள் எங்கே இருக்கிறது?

பெரியவர்கள் இத்தனை பொருளாகவும் அந்த மெய்ப் பொருள் இருக்கிறதென்று சொல்கிறார்கள். பலவாகக் காண்பது உண்மை அன்று என்று கூறுகிறார்கள். "ஒன்றாகக் காண்பதே காட்சி" என்று உபதேசம் செய்கிறார்கள். "மெய்ப்பொருள் நம்மை விட்டு, எங்கோ வெகு தூரத்தில் இருப்பது அன்று; அது நம்முடன் இடைவிடாமல் இருக்கிறது" என்று அவர்கள் சொல்வது நமக்குத் தெளிவுபடுவதில்லை. "பார்க்குமிடம் எங்கும் ஒரு நீக்கமற நிறைகின்ற பரிபூரணானந்தமே" என்று தாயுமானவர் சொல்கிறார். ஒரு நீக்கமறப் பார்க்குமிடம் எங்கும் நாம் காணும் பொருள்கள் மரம், மட்டை, மனிதன், வீடு, காடு, நாய், நரி என்பவைகளே. அவரோ பரிபூரண ஆனந்த மயமான பொருள் என்று சொல்கிறார். அவர் காண்பது உண்மையா? நாம் காண்பது உண்மையா?

நாம் காண்பது உண்மையானால் நமக்கு மனநிறைவு உண்டாக வேண்டும்; இன்பம் உண்டாக வேண்டும். நாமோ பல வகையில் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறோம். அதனால் நாம் காண்பதுவே சரி என்று சொல்ல இயலவில்லை.

திருவள்ளுவர் இதை விளக்குகிறார். நாம் படும் துன்பங்களுக்கெல்லாம் மூலம் பிறப்பு. பிறவி என்பது பெரிய துன்பம்;

215