பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 1

பல துன்பங்களை உண்டாக்கும் தாய் அது. அது நமக்கு எப்படி உண்டாகிறது? மெய்ப்பொருள் அல்லாதவற்றை மெய்யாகக் காண்பதனால்தான் துன்பம் நிறைந்த பிறப்பு உண்டாகிறது’ என்று வள்ளுவர் சொல்கிறார்.

"பொருள்அல்ல வற்றைப் பொருளென் றுணரும்
மருளான்ஆம் மாணாப் பிறப்பு"

என்பது குறள்.

மெய்ப்பொருள் அல்லாதவற்றை மெய்யாக உணர்வதுதான் மருள்: மயக்கம். அதையே அருணகிரியார் ப்ரமம் என்று சொல்கிறார். அதுதான் பிறப்புக்கு ஆதாரம். பிறப்பு மாணாதது; சிறப்பு இல்லாதது. துன்பம் தருவதனால் மாணாததாயிற்று.

இந்த மயக்கமாகிய மருள் இறைவன் அருளால் நீங்கும். மருள், ஒன்றை வேறு ஒன்றாகவும் பலவாகவும் காணும்படி செய்கின்றது. அருளோ யாவற்றையும் ஒன்றாகக் காணச் செய்கின்றது. இருட்டிலே தெளிவு இராது. கட்டை மனிதன் போலத் தோன்றும். ஒன்றும் இல்லாத இடத்தில் யாரோ நடமாடுவது போல இருக்கும். இந்த மருள் நீங்கி ஒளி உண்டானால் உள்ளது உள்ளபடியே தோன்றும். அருளால் ஒளி உண்டாக வேண்டும்.

"என் உள்ளத்தில் இருக்கிற இந்த மருளை நீ நீக்கியருள வேண்டும்" என்று அருணகிரிநாதர் வேண்டுகிறார்.

இந்தப் பிரமத்தால் உண்டாகும் துன்பங்களையும் அவர் சொல்கிறார்.

வஞ்சனை

சளத்திற் பிணிபட்டு அசட்டுக் கிரியைக்குள்
தவிக்கும்.

உள்ளத்தில் உள்ள மயக்கத்தால் உண்டாகும் விளைவுகள் பலவானாலும் இங்கே சுருக்கி இரண்டாகச் சொல்கிறார். சளத்தில் பிணிபட்டிருப்பது ஒன்று; அந்தப் பிணிப்பினால் அசட்டுக் கிரியைக்குள் தவிப்பது ஒன்று. இவை ஒன்றுக்கு ஒன்று காரணமாக நிற்பவை. ப்ரமத்தால் சளம் உண்டாகிறது; சளத்தால் அசட்டுக் கிரியைகள் உண்டாகின்றன. சளம்-வஞ்சனை. ப்ரமம் சளத்தை

216