பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/227

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பேய் விளையாட்டு

உண்டாக்க அதில் பிணிபட்டுக் கிடக்கிறோம். அதன் விளைவாக அசட்டுச் செயல்களைச் செய்கிறோம்; அதனால் தவிக்கிறோம். இந்த விளைவுகளை இனி விரிவாகப் பார்க்கலாம்.

சளமாகிய வஞ்சனையில் கட்டுப்பட்டு வாழ்கிறோம். அதற்குக் காரணம் முன் சொன்ன ப்ரமம்; அதுவே மயக்கம். அதையே அறியாமை என்றும் அவித்தை என்றும் அஞ்ஞானம் என்றும் கூறுவாாகள.

நாம் எத்தகைய வஞ்சனைக்குள் கட்டுப்பட்டிருக்கிறோம்? மனத்தில் ஒன்றும் வாக்கில் ஒன்றும் பேசுவது வஞ்சனைப் பேச்சு. மனத்தில் ஒன்றும் செயலில் வேறு ஒன்றும் செய்வது வஞ்சனைச் செயல். உள் ஒன்று வைத்துப் புறம் ஒன்று பேசுவதாகிய வஞ்சனையைப் பிறரிடம் நாம் காட்டுகிறோம். நாம் சொல்வது வஞ்சனைப் பேச்சு என்று பிறர் அறிவதில்லை. ஆனால் நமக்கு வேண்டிய ஒன்றை நாம் எண்ணும்போது அப்படியே செய்யாமல் நம்மை நாமே வஞ்சித்துக் கொள்கிறோம். நமக்கு நாமே வஞ்சனை செய்து கொள்வதனால் நமக்குக் கவலைகளும் அச்சமும் உண்டாகின்றன.

'தன்நெஞ் சறிவது பொய்யற்க; பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும்"

என்கிறார் வள்ளுவர்.

பொய்யை பொய்யாக உணர்வது மருள் அல்லது ப்ரமம். அதிலிருந்து விளைவது உள்ளும் புறமும் ஒவ்வாமல் இருக்கும் பொய். மூலப் பொய்யுணர்வுக்கு ப்ரமம் என்று பெயர். அதிலிருந்து விளையும் பொய்க்கு வஞ்சனை என்று பெயர்.

பிறரை வஞ்சிக்கும் குணம் தீயது; ஆனால் தன்னைத்தானே வஞ்சிக்கும் இயல்பு அதைவிடத் தீயது. இந்த வஞ்சனையில் நாம் கட்டுப்பட்டிருக்கிறோம். ஒரு செயலால் நமக்குத் துன்பம் விளைவதை அநுபவத்தில் உணரும்போது, இனி இப்படிச் செய்யக்கூடாது என்று எண்ணுகிறோம். ஆனால் மறுபடியும் அந்தச் செயலைச் செய்யப் போகிறோம். இது பெரிய வஞ்சனை. இதைத்தான் ஆத்ம வஞ்சனை என்று சொல்வார்கள். பிறரை வஞ்சிப்பவர்களைவிடத் தம்மைத்தாமே வஞ்சிப்பவர்களைப் பற்றி என்ன சொல்வது?

க.சொ.1-15

217