பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/23

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 1

வேண்டுமானால் ஆண்டவனைப் பற்றிக்கொள்ள வேண்டும். மலத்திலிருந்து விடுபட்ட ஒருவன் நான் இவ்வாறு விடுபட்டேன் என்று சொன்னால் அந்த இன்ப அநுபவம் நமக்கு வழிகாட்டியாக இருக்கும். இந்த வழிகாட்டி நிலையில் இருக்கின்றது அருணகிரிநாதப் பெருமானுடைய வாக்கு.

செத்த பிறகு சிவலோகம் வைகுந்தம் சேர்வதற்காக இறைவன் திருவருளைப் பெற வேண்டும் என்று நினைக்கிறோம். இந்த உலகத்தில் இருக்கும்போதே, இப்பிறவியிலேயே, இன்ப நிலை பெறலாம். "இத்தேகமொடு காண்பேனோ?" என்று தாயுமானவர் ஏங்குகிறார். இத்தேகத்தோடு வாழும்போதே இன்ப நலம் பெறலாம் என்பதை அருணகிரிநாதர் சொல்லுகின்றார். "நான் ஏதோ முற்பிறப்பில் நல்ல புண்ணியம் செய்ததனால்தான் இந்தப் பிறவியில் எனக்கு ஞான நிலை வந்தெய்தியது என்று எண்ண வேண்டாம். நான் பேறு சற்றும் இல்லாதவன்; தவம் சற்றும் இல்லாதவன்" என்கிறார். அப்படி இருந்தும் எனக்கு இப்பிறவியிலேயே, "இறைவன் அருளால் இன்பம் கிடைத்தது" என்று பெருமிதத்தோடு பாடுகின்றார்.

அத்தகைய பாடல்களைக் காணும்போது நாமும் நிச்சயமாக அந்த இன்ப நிலையை எய்த முடியும் என்ற நம்பிக்கை தோன்றும். தோன்றுவதோடு மாத்திரம் நிற்கக் கூடாது. 'நம்மைப் போலவே வாழ்ந்தவர், நம்மைப் போலவே உலகியல் துன்பங்களை அடைந்தவர் ஒருவர், நம்மிலும் சிறந்து நின்று, இன்ப வாரிதியில் மூழ்கித் திளைத்தார் என்றால், நாமும் அவர் காட்டிய நெறிப்படி வாழ்ந்து, அந்தப் பேரின்பத்தைத் துய்க்க வேண்டும்' என்ற ஆர்வம் உண்டாக வேண்டும்.

கருணைக்கு அருணகிரி

ருணகிரிநாதப் பெருமானைப் பற்றிப் பல பெரியார்கள் பலவகையாகப் பாடியிருக்கிறார்கள். அவர்களில் ஒருவர்,
   "காசுக்குக் கம்பன் கருணைக்கு அருணகிரி"

என்று பாடுகிறார்.

'கருணைக்கு அருணகிரி' என்று சொல்லியிருப்பதற்குக் காரணமாக ஒரு கதை சொல்வார்கள்.

14