பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/230

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 1

வத்தால் வருபவை என்று மூன்று வகைப்படும். தாபத்திரயம் என்பார்கள். ஆதியாத்மிகம், ஆதிபெளதிகம், ஆதிதைவிகம் என்று தனித்தனியே பெயரிட்டுச் சொல்வதுண்டு. இந்த மூன்று பிரிவில் அடங்கும் தவிப்புக்கு மூலம் நம்முடைய அசட்டுச் செயல்களே. அவற்றிற்கு மூல காரணம் சளம் அல்லது வஞ்சனை. அதற்கும் மூலமாக நிற்பது ப்ரமம்.

நமக்குக் காலிலோ கையிலோ ஒரு சிரங்கு வந்தால் அதைக் குணப்படுத்த டாக்டர் மருந்தை ஊசி வழியாக ரத்தத்தில் ஏற்றுகிறார். ரத்தத்தில் மருந்து கலந்தால் உடம்பில் எந்தப் பகுதியில் நோய் கண்டாலும் நீங்கும். அதுபோல மனிதனுடைய செயல்களில் உள்ள கோளாறுகளை நீக்க அவற்றுக்கெல்லாம் காரணமாக இருக்கிற உள்ளத்தில் ஊசி போட வேண்டும். உள்ளத்திலுள்ள மயக்கம் நீங்கிவிட்டால் உள்ளும் புறம்பும் ஒத்து நிற்கும். செய்யும் செயல்கள் யாவும் சத்தாகிவிடும். இறைவன் திருவருளால் உள்ளத்தே ப்ரமம் நீங்கி ஒளி உண்டாகிவிட்டால் செய்யும் செயல்கள் யாவும் இறைவனோடு தொடர்புடைய சத்தாகிவிடும்.

அருணகிரியார் தவிப்பைப் போக்குவாய் என்று சொல்லவில்லை; அசட்டுச் செயல்களை செய்யாமல் இருக்க அருள் என்று சொல்லவில்லை; உள்ளொன்றும் புறம்பொன்றுமாக இருக்கும் வஞ்சனை நிலையை மாற்று என்றும் வேண்டிக் கொள்ளவில்லை. எல்லாவற்றுக்கும் காரணமான ப்ரமத்தைப் போக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறார்.

சளத்தில் பிணிபட்டு அசட்டுக் கிரியைக்குள்
தவிக்கும்என்றன்
உளத்தில் ப்ரமத்தைத் தவிர்ப்பாய்

ப்ரமமாகிய அவித்தை போனால் பிணிபடுதல் இல்லை. உயிர் கட்டுப்பட்டிருக்கிறது. பாசத்தால் கட்டுப்பட்டிருக்கும் உயிர் அந்தக் கட்டினின்றும் விடுபடுவதுதான் முக்தி. முக்தி என்ற சொல்லுக்கே விடுதலை என்பதுதான் பொருள்; வீடு என்பதும் அதுதான். தேசம் விடுதலை பெற்றதென்று மகிழ்ச்சி அடைகிறோம். இது முடிந்த முடிவான விடுதலை அன்று. தேகத்தினின்றும் விடுதலை கிடைக்க வேண்டும். பிறவிப் பிணியினின்றும் நீங்கிச் சுயராஜ்யம் பெற வேண்டும். அது குருவின் மூலமாகக் கிடைக்கும் என்று வேதம் சொல்லுகிறது.

220