பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/235

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பேய் விளையாட்டு

மாண்டு மலையாகக் கிடந்தார்கள். அப்போது நெடுநாள் பசியுடன் இந்த பேய்கள் தங்களுக்கு வேண்டிய உணவைப் பெற்று மகிழ்ந்தன. அவை பிணத்தை வயிறார உண்டு, முருகனை வாழ்த்திக் கூத்தாடின.

'முகம் குதிரையாகவும், உடம்பு மனிதர்களைப் போலவும் இருந்த சூரன் நடுங்கும்படி, ஆறு முகங்களோடு சென்று தலை கீழாகக் கவிழ்ந்த பூங்கொத்துக்களை உடைய மாமரமாக இருந்த சூரனை அழித்துத் தேவர்களுக்கும் பேய்களுக்கும் மகிழ்வு அளித்தான், குற்றமற்ற வெற்றியையும், யாராலும் அறிதற்கரிய புகழையும் உடைய செவ்வேற் சேய்' என்று நக்கீரர் பாடுகிறார்:

'உலறிய கதுப்பிற் பிறம்பற் பேழ்வாய்ச்
சுழல்விழிப் பசுங்கண் சூர்த்த நோக்கின்
கழல்கட் கூகையொடு கடும்பாம்பு தூங்கப்
பெருமுலை அலைக்கும் காதிற் பினர்மோட்டு
உருகெழு செலவின் அஞ்சுவரு பேய்மகள்
குருதி ஆடிய கூர்உகிர்க் கொடுவிரல்
கண்தொட்டு உண்ட கழிமுடைக் கருந்தலை
ஒண்டொடித் தடக்கையின் ஏந்தி வெருவர
வென்றடு விறற்களம் பாடித் தோள்பெயரா
நினம்தின் வாயள் துணங்கை தூங்க
இருபேர் உருவின் ஒருபேர் யாக்கை
அறுவேறு வகையின் அஞ்சுவர மண்டி
அவுணர் நல்வலம் அடங்கக் கவிழ்இணர்
மாமுதல் தடிந்த மறுவில் கொற்றத்து
எய்யா நல்இசைச் செவ்வேற் சேய்'[1]
225
  1. 1.உலறிய கதுப்பின்-உலர்ந்த கூந்தலையுடைய. பேழ் வாய்-ஆழமான வாய். சூர்த்த நோக்கு-அச்சம் தரும் பார்வை. கூகை-ஆந்தை. தூங்க-தொங்க. பினர் மோடு-சுரசுரப்பையுடைய வயிறு. உரு-அச்சம். செலவு-நடை உகிர்-நகம் தொட்டு-தோண்டி. கழி முடை-மிக்க நாற்றத்தையுடைய தொடி-வளை. வெருவர-அச்சம் உண்டாக. தோள் பெயரா-தோளை அசைத்து. துணங்கை-கைகோத்து ஆடும் கூத்து. தூங்க-ஆட. அவுணர்-அசுரர். வலம்-வெற்றி, இணர்-பூங்கொத்து. மா முதல்-மாமரத்தின் அடி. தடிந்த-அழித்த. மறு-குற்றம். எய்யா-அறிய இயலாத. இசை-புகழ். சேய்-முருகன்.