பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/236

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 1

பரணி நூல்கள்

ப்படி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே எழுந்த திருமுருகாற்றுப் படையில் நக்கீரர் பேய்களின் கூத்தை விளக்கியிருக்கிறார்.

புறநானூறு முதலிய நூல்களிலும் வேறு பல சங்க நூல்களிலும் களவேள்வியைப் பற்றிய செய்திகள் பல இடங்களில் வருகின்றன. பேய்கள் பசியினால் வருந்துவதையும் காளியிடம் முறையிடுவதையும் போர் நிகழ்வது தெரிந்து ஓடிச் சென்று களத்தில் பிணங்களைக் கொண்டு விருந்து சமைத்து உண்பதையும் விரிவாகச் சொல்லும் பிரபந்தம் ஒன்று உண்டு. அதற்குப் பரணி என்று பெயர். கலிங்கத்துப் பரணி என்ற நூல் மிகச் சிறந்தது. குலோத்துங்கன் படை வடக்கே சென்று வெற்றி பெற்று வந்ததை அது வருணிக்கிறது. பேய்கள் காளி தேவியைச் சுற்றிக் கொண்டு, "ஐயோ! நாங்கள் சாப்பிட்டுப் பல காலம் ஆகி விட்டனவே, பட்டினியாகக் கிடந்து தவிக்கிறோமே! எங்களுக்குச் சாப்பாடு போடு" என்று கூக்குரல் போடுமாம்; கூத்தாடுமாம். எங்கேயாவது யுத்தம் நடக்கிறது என்று தெரிந்தால், அவைகளுக்கு ஒரே கொண்டாட்டம். பரணிகளில் இதைக் காணலாம்.

அரசர்களின் வீரத்தைப் பாராட்டும் போது களவேள்வியைப் பற்றிச் சொல்வது பழங்கால வழக்கம். பிற்காலத்தில் ஆண்டவனைப் பற்றிப் பாடும்போதும் களவேள்வியைப் பற்றிப் பலர் பாடியிருக்கிறார்கள். ஒட்டக்கூத்தர் பாடியது தக்கயாகப் பரணி. அதில் பேய்கள் உணவு பெறாமல் வருந்தும் திண்டாட்டமும் தக்கயாக சங்கார காலத்தில் உணவு பெற்றுக் களித்தாடும் கொண்டாட்டமும் வருகின்றன.

பேய்கள் எல்லாம் காளியிடம் போய்ச் சொல்கின்றன. "அம்மா உன்னுடைய பிள்ளை முன் காலத்தில் என்ன செய்தான் தெரியுமா? எங்களுக்கு எல்லாம் பெரிய விருந்து வைத்தான். சூர சங்காரம் செய்யும்போது அசுரர்களை மலைமலையாகக் கொன்று குவித்தான்; பள்ளம் விழுந்ததுபோலக் குழி விழுந்து போன எங்கள் வயிறுகள் புடைக்கும்படியாக உணவு போட்டான்" என்று அவை சொல்கின்றனவாம்.

226