பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பேய் விளையாட்டு

"குரொடும்பொர வஞ்சிசூடிய பிள்ளையார்படை தொட்டநாள்
ஈருடம்பு மிசைந்திரண்டுதிரப்பரப்பும் இரைத் தனம்."
"அசும்புதூர்வயி றாரமுன்பவர் செற்றதானவர் அற்றநாள்
விசும்புதூர விழும்பிணங்கள் நிணங்களுற மிசைந்தனம்."

சூரபன்மனோடு போராட முருகன் புறப்பட்டபோது வஞ்சி சூடிக் கொண்டு புறப்பட்டான். புறப்பட்டுச் சென்று வேலை விட்ட நாளில் சூரனுக்குரிய இரண்டு உடம்புகளையும் பேய்கள் உண்டன. இரண்டு உடல்களின் உதிரத்தையும் குடித்துப் பருத்தன.

"போர்க்களத்தில் மலைமலையாகப் பிணங்கள் கிடந்தன. வானமளாவக் குவிந்து கிடந்தன. அவற்றின் கொழுப்புக்களை எங்கள் குழி விழுந்த வயிறுகள் நிரம்பும்படியாக உண்டோம்" என்று அந்தப் பேய்கள் சொல்லுகின்றன.

இறைவனைப் பற்றி விரிவாக எண்ண வேண்டுமானால் அவன் வீரமுடையவன், கருணையுடையவன் என்று பல குணங்களுக்கு உரியவனாகவே நினைக்க வேண்டும். வீரம் உடையவன் என்பது எப்படித் தெரியும்? "போர் நடந்தது; பகைவர்கள் மாண்டார்கள்; போர்க்களத்திலே மலைபோலக் கிடக்கின்ற பிணங்களைச் சுற்றிப் பேய்கள் கூடிக்கொண்டு களிப்புடன் அவற்றைத் தின்றன" என்று சொன்னால் தெரியும்.

அரசர்களும், வீரர்களும் செய்த போரில் பேய்கள் விருந்து நுகர்ந்தன என்ற செய்தி உண்மை நிகழ்ச்சியோடு ஒட்டாமல், கவிமரபாக நிற்கின்றது. வீரத்தைப் பெருகப் பேசுவதற்கு ஏற்ற நிலமாக இத்தகைய செய்திகள் அங்கே பயன்படுகின்றன. ஆனால் இறைவனுடைய வீரத்தைப் பற்றிச் சொல்கையில் அவை மற்ற நிகழ்ச்சிகளோடு ஒட்டி நிற்கின்றன.

அரசர் போர் செய்தது வரலாற்று நிகழ்ச்சி, பேய்கள் விளையாடியது கற்பனை நிகழ்ச்சி. இரண்டும் வெவ்வேறு வகை. கவிதையில் இவை இணைகின்றன. ஆனால் இறைவனுடைய பெருமையைக் கூறும் புராணச் செய்திகளில் அவ்விரண்டும் இயல்பாகவே இணைந்து நிற்கின்றன. இறைவன் போர் செய்யும் போது நிகழும் நிகழ்ச்சிகள் உலகியலுக்கு அப்பாற்பட்டவை; பேய்களின் விளையாடலும் அத்தகையனவே. உண்மை நிகழ்ச்சிகளானாலும், கற்பனையானாலும், உள்ளுறையை உடைய கதையானாலும் இரண்டும் ஒரே நிலையில் இருப்பவை.

227