பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 1

ஆதலின் அரசர் செய்த போரில், களத்தில் பேய்கள் ஆடின என்பதைவிட முருகன் செய்த போரில் பேய்கள் உண்டுகளித்தன என்பது பொருத்தமாகத் தோற்றுகிறது.

திருமுருகாற்றுப்படையில் நக்கீரர் பேய்க் கூத்தைப் பாடியதை முன்பு பார்த்தோம். மற்றோரிடத்திலும் சுருக்கமாக இச்செய்தி வருகிறது. முருகப் பெருமானுடைய ஆறு திருமுகங்களும் இன்ன இன்ன காரியங்களைச் செய்கின்றன என்று ஒரிடத்தில் வருணிக்கிறார். அவனுடைய திருமுகங்களில் ஒன்றுமாயிருள் ஞாலம் மறுவின்றி விளங்கும்படியாகப் பலவகைக் கதிர்களைப் பரப்புகின்றது; அன்பர்களுடைய வேட்கைகள் நிறை வேறும்படி வரமளிக்கும் அருட்செயலைச் செய்கின்றது மற்றொரு முகம்; வேத முறைப்படி அந்தணர்கள் செய்கின்ற யாகங்களைத் தீங்கின்றிப் பாதுகாக்கின்றது ஒருமுகம்; யாராலும் விளக்க முடியாமல் இருக்கின்ற பொருள்களை விளக்குகின்றது ஒரு முகம்; வள்ளியெம் பெருமாட்டி யோடு கூட இன்புற்று மகிழும் செயலைப் புரிகின்றது ஒரு முகம்.

"........................ ஒரு முகம்
செறுநர்த் தேய்த்துச் செல்சமம் முருக்கிக்
கறுவுகொள் நெஞ்சமொடு களம்வேட் டன்றே"

என்பது ஒரு முகத்தைப் பற்றிய செய்தி.

வீரர்களுள் தலைசிறந்த வீரன் முருகன்; அவன் தேவசேனாபதி. தேவர்களுடைய பகைவர்கள் அசுரர்கள். அசுரர்களால் தேவர்களுக்கு எவ்விதமான தீங்கும் ஏற்படாதவாறு காப்பாற்ற அவன் விரதம் எடுத்துக் கொண்டிருக்கிறான். "நிருத ரார்க்கொரு காலா ஜேஜய" என்று திருப்புகழில் பாடுகிறார் அருணகிரிநாதர்.

பகைவர்களை அழித்து, வருகின்ற சண்டைகளைப் போக்கி, கறுவுதல் கொண்ட உள்ளத்தோடே களவேள்வி செய்தது ஒரு முகம் என்பது திருமுருகாற்றுப்படைப் பகுதியின் பொருள்.

மரபு வழியே

வ்வாறு பழங்காலம் முதற்கொண்டே வழங்கி வருகின்ற மரபை ஒட்டியே அருணகிரிநாதர் பேயின் விளையாட்டைப் பாடுகின்றார். வாழ்நாள் முழுவதும் முருகனைப் பற்றிப் பாடுவதையே தம் பணியாகக் கொண்டவர் அவர். முருகனைப் பற்றி

228