பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/241

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பேய் விளையாட்டு
குருதிக் கடலைப் பெருகப் பருகிக்
குணலைத் திறனிற் களிக்கும் ஒருதிரள்"[1]

என்று தொடங்குவது அது. 'ஒரு பேய்க் கூட்டம் இறந்து போன திரளான குதிரைப் பிணங்களை எடுத்துக் குருதி வெள்ளத்தில் குளிக்கும். மற்றொரு பேய்க் கூட்டம் ரத்தக் கடலை நிரம்பக் குடித்துக் குணலையென்னும் கூத்தாடிக் களிக்கும்' என்று பாடுகிறார் அருணகிரியார்.

ஒன்பதாவது திருவகுப்பு, போர்க்களத்து அலகை வகுப்பு, தணிகையென்னும் பதியில் நிற்பவனாகிய முருகன், 'கொலை நிருதரை முனிந்த போர்க்களத்தில் அலகை' செய்தவற்றை விரித்துரைப்பது அது. அந்த அலகைகள் பசியினால் பயிரவியை வாழ்த்துகின்றனவாம்.

"பவுரிவ ரும்பரி புரம்நரல் பங்கய
வித்தா ரத்தன பயிரவி பதங்கள்
வாழ்த் தெடுத்த பசியன"[2]

அவை இப்போது வேண்டிய உணவைப் பெற்றுக் கூத்தாடுகின்றன. எத்தனை விதமான ஆட்டம்! அவை உருவத்தால் இருண்டன. உலவி நிணம் மொண்டு கூட்டு அமைத்து நுகர்வன. உலகு குலுங்கிட அரிய துணங்கையினைச் சாதிப்பன. உவன படலங்களும் காக்கைகளும் சுற்றி வருவன. இப்படி வருணிக்கிறார். ஒடுகின்ற ரத்த ஆற்றில் முழுகி எழுகின்றன; ஆரவாரம் செய்கின்றன; கடல் அதிரப் பூமி பிளக்க நடை பயில்கின்றன.

“ஒழுகுதி ரந்தனில் முழுகிஎ ழுந்தன
உச்சா டத்துடன் உடைகடல் அதிர்ந்து
கூப்பிளக்கும் நடையின."[3]

அவை கூத்தாடும் ஓசையையும் பாடுகிறார்.


231
  1. பட்ட-இறந்த. குருதி-இரத்தம். குணலைத் திறனில்-குணலை என்ற கூத்தின் வகையைப்போல.
  2. பவுரி-சுழன்றாடும் கூத்து. பரிபுரம் நரல் பங்கயம்-சிலம்பு ஒலிக்கும் தாமரை போன்ற பாதம். பங்கயத்தையும் தனத்தையும் உடைய பைரவி.
  3. உச்சாடம்-உயர்ந்த ஆரவாரத் தொனி. கூப்பிளக்கும்-பூமியைப் பிளக்கச் செய்யும்.