பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/246

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.


முகவுரை

தமிழ்நாட்டில் கடவுளை நினைப்பதற்கு வாய்ப்பாகப் பல அமைப்புக்களும், பொருள்களும் வழக்கங்களும் இருக்கின்றன. கோயில்கள், புராணங்கள், நூல்கள் ஆகியவை கடவுளின் நினைவை எப்போதும் பசுமையாக இருக்கும்படி செய்கின்றன. மக்களுக்கு இடும் பெயர்களும், பண்டிகைகளும் நினைவுக்கு உரமூட்டுகின்றன. கடவுள் ஒருவனே என்ற அடிப்படையான உண்மையை நாம் மறப்பதில்லை. ஆனாலும் அன்பர்களின் விருப்பத்தை நிறைவேற்ற அவன் வெவ்வேறு திருவுருவம் கொள்கிறான் என்று நூல்கள் கூறுகின்றன. அவ்வப்போது திருவவதாரம் செய்த மூர்த்திகளும், அன்பர்களின் வேண்டு கோளுக்கு இணங்க எழுந்தருளிய மூர்த்திகளும் பல பல. திருமால் பத்து அவதாரங்கள் எடுத்தார். ஆனால் அவருடைய திருக்கோலங்கள் பத்தோடு நிற்பவை அல்ல. அவற்றையல்லாமல் வேறு வடிவங்களும் உண்டு. அந்தப் பத்திலும் ஒவ்வொன்றிலும் பல நிலைகள் இருக்கின்றன. ராமன் ஓர் அவதார மூர்த்தி, ஆனாலும் அவனுடைய கோலங்கள் எத்தனை விதமான அன்பர்களுடைய உள்ளத்தே காட்சியளிக்கின்றன. கோசலையின் கைக்குழந்தைகளாகிய கெளசல்யா ராமன் ஒரு மூர்த்தி. தளர்நடை பழகும் ராமன் ஒரு மூர்த்தி. வசிஷ்டரிடம் மாணாக்கனாக இருக்கும் ராமன் ஒரு மூர்த்தி. இப்படியே தசரத ராமன், ஆரண்ய ராமன், சீதா ராமன், கோதண்ட ராமன், பட்டாபிராமன் என்று ராமனுடைய கோலங்களும், நிலைகளும் பலவாக இருக்கின்றன. சிற்பத்திலும் ஒவியத்திலும் வடித்துக் காணும் திருவுருவக் கோலங்களின் வகை இவை.

இவற்றையன்றிக் குணநலங்களை நினைக்கும் நுட்பக் கோலங்கள் பல. இவற்றைக் குறிக்கும் பெயர்கள் அனந்தம். வழிபாட்டு முறைகள், மந்திரங்கள், அர்ச்சனைகள், புராணங்கள், துதி நூல்கள் என்று ராமனைக் காட்டும் கருவிகள் பல.