பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/248

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
முகவுரை

பின்பும் பல பெரியோர்கள் முருகனைப் பாடினார்கள். ஆனால் அருணகிரிநாதரைப் போல விரிவாகப் பாடினவர்கள் வேறு யாரும் இல்லை. அவருடைய கற்பனையும் சந்த அமைப்பும் வியக்கத் தக்கவை.

அவர் இயற்றிய நூல்கள் எல்லாவற்றிலுமே சில பொதுப் பண்புகளைக் காணலாம். விரிந்த பாட்டாக உள்ள திருப்புகழிலும் கட்டளைக் கலித்துறையாக அமைந்த கந்தர் அலங்காரத்திலும் கலி விருத்தத்தாலாகிய கந்தர் அநுபூதியிலும் அருணகிரிநாதர் பாணி இருக்கும்.

முருகனுடைய திருவுருவ வருணனையை ஓரிடத்தில் அமைப்பார். அவன் திருநாமங்களைப் பிறிதோரிடத்தில் அடுக்குவார். அவன் குழவிப் பருவ விளையாடல்களைச் சொல்வார். வீரச் செயல்களை விரித்துரைப்பார். வள்ளியம்மைபால் காதல் பூண்ட கருணையைப் பாராட்டுவார். இவை கந்தவேளின் திருவிளையாடல்கள். தமக்கு அவனருளால் கிடைத்த இன்பத்தைச் சில இடங்களில் எடுத்துச் சொல்லி உருகுவார். தகுதியில்லாத தம்மையும் ஆண்டுகொண்ட கருணையை எண்ணி வியப்பார். அவன் திருவருளால் தமக்குக் கிடைத்த அநுபவத்தைச் சொல்ல முடியாமல் திணறுவார்.

தாம் தவறு செய்வது போலவும் குற்றம் மிக உடையவர் போலவும் கூறி இரங்குவார். தமக்கு அருள் செய்ய வேண்டுமென்று பணிந்து வேண்டுவார்.

உலகில் மக்கள் இறைவன் அருளைப் பெறாமல் வீணாகப் பிறந்திறந்து அல்லற்படுவதை எண்ணி வாடுவார். இறைவனைப் பணியுங்கள், பாடுங்கள் என்று பணிப்பார். அறம் செய்யுங்கள் என்று அறிவுரை கூறுவார். பாவச் செயல்களைச் செய்து வீணாகிறீர்களே; இவ்வாறு நடவுங்கள் என்று வழிகாட்டுவார்.

உயர்ந்த ஞானநெறியைச் சொல்வார். சரியை, கிரியை யோகங்ளையும் சொல்வார்.

முருகனைப் பாராட்டுவதோடு அவனிடம் உள்ள பொருள்களையும் போற்றுவார். அவற்றின் இயல்பை விரித்துரைப்பார்.

239